ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள பேரன்பு திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்குத் தேர்வாகிவருகிறது.
திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு படங்கள் விருது பெறுவது படம் பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான வழிமுறையாக உள்ளது. இதன் மூலம் படங்களின் தரம் வெளியாவதற்கு முன்னரே ரசிகர்களுக்கு கூறப்பட்டுவிடுகிறது. அந்த வகையில் பேரன்பு திரைப்படமும் அந்த வரிசையில் இணைந்துள்ளது.
மம்மூட்டி, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள பேரன்பு திரைப்படம் சர்வதேச விழாக்களில் பங்கெடுத்துவருகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பேரன்பு திரைப்படத்தின் முதல் பிரத்யேகக் காட்சி 47ஆவது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ஜனவரி மாதம் திரையிடப்பட்டது. 187 உலக திரைப்படங்கள் போட்டியிட்டதில் பார்வையாளர்கள் விருதிற்கான பிரிவில், பேரன்பு முதல் 20 திரைப்படங்களில் இடம்பெற்ற ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சிறப்பைப் பெற்றது. மேலும் சிறந்த ஆசிய படத்திற்கு கொடுக்கும் NETPAC விருதிற்கு போட்டிப் பிரிவில் தேர்வாகியது.
தற்போது பேரன்பு திரைப்படம் ஜூலை 16 முதல் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 21ஆவது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தேர்வாகியுள்ளது.
படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.