மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 மே 2018

எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு!

எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு!

கர்நாடக முதல்வராக இன்று காலை பதவியேற்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். இதை பாஜகவின் தேசிய செயலாளர் முரளிதரராவ் உறுதிபடுத்தியுள்ளார்.

கர்நாடகாவில் ஆட்சியமைக்க யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 இடங்களைப் பெற்ற பாஜகவின் சட்டமன்றக் கட்சித் தலைவர் எடியூரப்பா, நேற்று காலை ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்கள் கடிதத்தையும் அவர் அளித்தார். அதைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்க மஜத தலைவர் குமாரசாமி உரிமை கோரினார்.

பரபரப்பான மற்றும் சிக்கல் மிகுந்த இந்த அரசியல் சூழ்நிலையில் ஆளுநரின் முடிவை நோக்கித்தான் அனைவரின் பார்வையும் இருந்தது. அடுத்ததாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் வஜுபாய் வாலா முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜியுடன் நேற்றிரவு சட்ட ஆலோசனை மேற்கொண்டார்.

இதற்கிடையே முதல்வராகப் பதவியேற்க எடியூரப்பாவை ஆளுநர் அழைத்துள்ளதாக நேற்று இரவு 8 மணியளவில் கர்நாடகக் காவல் துறையிடமிருந்து தகவல் வெளியானது. அதாவது, காவலர்கள் யாரும் இன்று விடுப்பு எடுக்கக் கூடாது என்றும், எடியூரப்பா பதவி ஏற்பைக் கண்டித்து மஜத - காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தலாம் என்பதால் போராட்டத்தை சமாளிக்கும் வகையில் காவலர்களைத் தயார்படுத்தவும் காவல் அதிகாரிகளுக்கு பெங்களூரு மாநகர ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும் கூறப்பட்டது.

நேற்று இரவு 9.30 மணிக்கு பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேசிய செயலாளர் முரளிதரராவ் இந்தப் பதவி ஏற்புத் தகவலை உறுதிப்படுத்தினார். “கர்நாடக முதல்வராகப் பதவியேற்க வருமாறு எடியூரப்பாவுக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 15 நாள்கள் அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது” என்ற அவர், “தேர்தலுக்கு முன்பு காங்கிரஸும் மஜதவும் ஒருவரையொருவர் எவ்வாறு அருவருக்கத்தக்க வகையில் திட்டிக்கொண்டனர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் தேர்தலில் பாஜக தனிப் பெருங்கட்சியாக வெற்றி பெற்றுள்ள நிலையில், எங்களது ஆட்சியைத் தடுக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸும் மஜதவும் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளன” என்றும் விமர்சனம் செய்தார்.

“இது காங்கிரஸ் அல்லாத ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்ற கர்நாடக மக்களின் தேர்தல் தீர்ப்புக்கு எதிராகவே உள்ளது. இதை நாங்கள் ஆளுநரிடம் எடுத்துக் கூறினோம். இதையடுத்து எங்களுக்கு ஆளுநர் பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார். கண்டிப்பாக நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

வியாழன் 17 மே 2018