மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 மே 2018

எடியூரப்பா பதவியேற்பு: நள்ளிரவில் நடந்த உச்ச நீதிமன்ற விசாரணை!

எடியூரப்பா பதவியேற்பு: நள்ளிரவில் நடந்த உச்ச நீதிமன்ற விசாரணை!

கர்நாடக அரசியலில் அதிரடியாக நடைபெற்று வரும் திருப்பங்கள் நேற்று (மே 16) இரவு முதல் விடிய விடிய பல்வேறு பரபரப்புக் காட்சிகளை பெங்களூருவிலும் டெல்லியிலும் அரங்கேற்றியுள்ளன. கர்நாடகா முதல்வராக எடியூரப்பா பதவியேற்பதை தடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிகாலை கூறிவிட்டது. ஆனபோதும் காங்கிரஸ் மஜதவினரின் மனுவை தள்ளுபடி செய்ய வில்லை என்றும் இதை பின் விசாரிப்பதாகவும் கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.

நேற்று இரவு பெங்களூருவில் தொடங்கி அதிகாலை உச்ச நீதிமன்றம் வரை சென்ற இந்த பரபரப்புக் காட்சிகளை டைம் டு டைம் ஆக மின்னம்பலம் வாசகர்களுக்குத் தருகிறோம்.

நேற்று இரவு 9.30 மணிக்கு கர்நாடக ஆளுநர் ஆட்சி அமைக்க வருமாறு தனிப்பெரும் கட்சியான பாஜகவின் சட்டமன்றக் கட்சித் தலைவர் எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்தார். ஏற்கனவே நேற்று பகலில், ‘ஆளுநர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தால் நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்’ என்று மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி தெரிவித்திருந்தார்.

இரவு 11.30

சொன்னாற்போல நேற்று இரவு 11.30 க்கு உச்ச நீதிமன்றப் பதிவாளரை நாடிய காங்கிரஸ் -மஜத தலைவர்கள், ‘நாளை காலை 9 மணிக்கு எடியூரப்பாவை பதவியேற்க அழைத்திருக்கிறார் கர்நாடக ஆளுநர். இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. உடனடியாக தடை விதிக்க வேண்டும். நாங்கள் மெஜாரிட்டியோடு ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், தனிப்பெரும் கட்சியான பாஜகவை மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது சட்ட விரோதம்’’என்று காங்கிரஸ் -மஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இரவு 12.00

இரவு 12 மணிக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் வீட்டு வாசலில் போலீஸார் குவிக்கப்பட்டனர். பேரி கார்டுகளால் அவர் வீட்டைச் சுற்றித் தடுப்புகள் அமைக்கப்பட்டன. எனவே இரவே இந்த வழக்கை விசாரிக்க இருக்கிறார் என்பது உறுதியாகி அனைத்து முக்கிய ஊடகங்களும் தீபக் மிஸ்ராவின் வீட்டு வாசலில் குவிந்தன.

இரவு 12.30

உச்ச நீதிமன்றப் பதிவாளர் காங்கிரஸ்- மஜத தலைவர்களின் அவசர மனுவை கையோடு எடுத்துக் கொண்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் வீட்டுக்கு விரைந்தார். 12.30 மணியளவில் அவர் தலைமை நீதிபதியின் வீட்டை அடைந்தார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரன், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுவைதான் அவர் தீபக் மிஸ்ரா வீட்டுக்கு எடுத்து வந்திருந்தார். அரசியல் அமைப்புச் சட்டம் 14-ன்படி ஆளுநர் எடியூரப்பாவை முதல்வர் பதவி ஏற்க அழைத்தது சட்டத்துக்கு முரணான செயல் என்பது உள்ளிட்ட விரிவான மனுவாக அது இருந்தது.

இரவு 1.45- உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் வீட்டில் சுமார் அரைமணி நேரம் நடந்த ஆலோசனைக்குப் பின் இரவு 1.15 மணி வாக்கில் இம்மனுவை ஏற்றதாக அறிவித்தது உச்ச நீதிமன்றம். அதன்படி உச்ச நீதிமன்றத்தில் இரவு 1.45 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் நீதிபதி ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷன், காப்டே ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் குவிந்த வழக்கறிஞர்கள்!

இந்த அறிவிப்பை எடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஊடகத்தினரும் வழக்கறிஞர்களும் குவிந்தனர். காங்கிரஸ், மஜத சார்பில் மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி இரவு ஒன்றரை மணிக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தார். அரசு சார்பாக முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்தனர்.

இரவு 2 மணி: விசாரணை தொடங்கியது

இரவு 2 மணி வாக்கில் இந்த மனுவின் மீதான விசாரணை தொடங்கியது. “தேர்தலுக்குப் பின் அமைக்கப்பட்ட கூட்டணியான காங்கிரஸ் - மஜத கட்சிகளின் கூட்டணிக்கு பெரும்பான்மை இருக்கும் நிலையில், பெரும்பான்மை இல்லாத தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது தவறு. ஆளுநரின் அழைப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும். தேர்தலுக்குப் பிறகான கூட்டணிகள் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது என்பது கோவா, மணிப்பூர், உபி, ஜார்க்கண்ட், டெல்லி என்று பல மாநிலங்களில் இதற்கு முன் நடந்துள்ளது. மேலும் மெஜாரிட்டியே இல்லாத பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்து 15 நாட்கள் அவகாசமும் கொடுத்துள்ளதன் மூலம் ஆளுநர் பெரிய தவறு செய்திருக்கிறார்.

சர்க்காரியா கமிஷனின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஆளுநர் செயல்படவில்லை.எனவே ஆளுநர் எடியூரப்பாவுக்கு விடுத்த அழைப்பை ரத்து செய்ய வேண்டும். மேலும் காங்கிரஸ் - மஜத கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்குமாறு அவருக்கு அறிவுறுத்த வேண்டும்’’ என்று வாதிட்டார். அபிஷேக் சிங்வி.

மேலும், ‘’ஆளுநரின் இந்த அழைப்பு மற்றும்15 நாள் அவகாசம் மூலம் குதிரை பேரத்துக்கு வழி தொடங்கிவிட்டது. அது குதிரை வியாபாரம் அல்ல. குதிரை வியாபாரம் என்று சொல்லி குதிரைகளை அவமதிக்க விரும்பவில்லை. இது மனித வியாபாரம். கர்நாடகாவில் ஆளுநரின் உத்தரவால் மனித வியாபாரம் நடக்கிறது. இதைத் தடுக்க வேண்டும்’’ என்றார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி இதற்கு பதில் அளித்து வாதாடுகையில், “ஆளுநரின் உத்தரவை மாற்றி அமைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை’’ என்றார்.

ஆனால் குறுக்கிட்ட அபிஷேக் சிங்வி, ‘’எத்தனையோ வழக்குகளில் ஆளுநர்கள் விதித்த 356 உத்தரவுகளே திருத்தப்பட்டுள்ளன’’ என்று பதில் அளித்தார்.

மேலும், “இரவு 2 மணிக்கு உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்ந்து இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்தே இந்த விஷயத்தின் தீவிரத் தன்மை புரிகிறது. இந்த விசாரணை என்பது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி.

இந்த விசாரணை முடியும் வரை பதவியேற்பை தள்ளி வைக்க வேண்டும். பதவியேற்பு நிகழ்வை நாளைக்கு (மே 18)க்கு தள்ளி வைக்க வேண்டும்’’ என்று வாதங்களை வைத்தார்.

நீதிபதிகள் கேள்வி!

மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, கே.கே.வேணுகோபால் ஆகியோரைப் பார்த்து நீதிபதி ஏகே சிக்ரி ‘’குமாரசாமி தனக்கான 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுப் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்திருக்கும்போது, எடியூரப்பா பின் எவ்வாறு மெஜாரிட்டியான 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக சொல்ல முடியும்?’’என்று கேட்க, ‘அதை சட்டமன்றத்தில்தான் சொல்ல முடியும்’’ என்று பதிலளித்தது மத்திய அரசுத் தரப்பு.

முகுல் ரோத்தகி வாதங்கள்:

இந்த வழக்கு நள்ளிரவில் விசாரிக்க்கப்பட வேண்டிய வழக்கே அல்ல. உறங்கிக் கொண்டிருந்த என்னை நள்ளிரவில் எழுப்பிக் கொண்டு வந்துவிட்டார்கள். குடியரசுத் தலைவர், ஆளுநர்களின் ஆணைகளை உச்ச நீதிமன்றம் உடனடியாக திருத்தவோ ரத்து செய்யவோ முடியாது. எனவே இந்த வழக்கை இப்போது விசாரணைக்கு எடுத்துக் கொண்டதே தவறு. அரசியல் அமைப்புச் சட்டம் 164-ன்படி ஆளுநர் தன் அரசியல் சாசன கடமையை செய்வதை யாரும் தடுக்க முடியாது என்றார் ரோத்தகி.

அதிகாலை 4.25 தீர்ப்பு

இரு தரப்பின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘’கர்நாடக ஆளுநர் முதல்வராக பதவியேற்குமாறு எடியூரப்பாவுக்கு விடுத்த அழைப்பை ரத்து செய்ய முடியாது. ஆனாலும் இந்த மனுவை நாங்கள் தள்ளுபடி செய்யவில்லை. பிறகு விசாரிப்போம்’’என்று கூறி வழக்கு விசாரணையை முடித்தனர்.

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

4 நிமிட வாசிப்பு

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

வியாழன் 17 மே 2018