மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

குதிரை பேரத்தைப் பிரதமர் ஊக்குவிக்கிறார்!

குதிரை பேரத்தைப் பிரதமர்  ஊக்குவிக்கிறார்!

‘குதிரை பேரத்தைப் பிரதமர் மோடி ஊக்குவிக்கிறார்’ என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் பாஜக 104, காங்கிரஸ் 78, மஜத 37 இடங்களைக் கைப்பற்றின. ஆட்சியமைக்கத் தேவையான 112 இடங்கள் யாருக்கும் கிடைக்காத நிலையில், மஜத ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. ஆனால், ஆட்சியைப் பிடிக்கும் முனைப்போடு செயல்பட்டுவரும் பாஜக, கடந்த 2008ஆம் ஆண்டு எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியமைத்தது போல (ஆபரேஷன் கமல்) தற்போதும் முயல்வதாகக் காங்கிரஸ், மஜத கட்சிகள் குற்றம்சாட்டின.

மஜத கூட்டம் முடிந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் குமாரசாமி, “எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களைத் தங்கள் பக்கம் இழுக்க 100 கோடி ரூபாய் பணமும், அமைச்சர் பதவியும் வழங்குவதாக பாஜக ஆசை வார்த்தை கூறுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்களை இழுக்கும் பாஜக தலைவர்களின் குதிரை பேர முயற்சியைப் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் ஊக்குவிக்கிறார்கள். ஆட்சியமைப்பது தொடர்பாக ஆளுநர் நியாயமாக எங்களுக்குத்தான் அழைப்பு விடுக்க வேண்டும். மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. ஒற்றுமையாக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon