மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஜூன் மூன்றாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று (மே 16) 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், மருத்துவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கையேடுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “கடந்த ஆண்டில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவியபோது தீவிர நடவடிக்கை மூலமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. நடப்பாண்டிலும் டெங்கு காய்ச்சல் பரவுவதை முன்கூட்டியே தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
கடந்த நான்கு மாதங்களில் நாட்டிலேயே அதிகமாகத் தமிழகத்தில் தான் 1,451 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சமீபத்தில் மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.