மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 மே 2018

சிறப்புக் கட்டுரை: கிராமப்புற இந்தியாவும் இந்திய அரசும்!

சிறப்புக் கட்டுரை: கிராமப்புற இந்தியாவும் இந்திய அரசும்!

பா.சிவராமன்

உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் ஆதித்யநாத் யோகி சாதி கொடுமைகளுக்குள்ளான தலித் குடும்பங்களுக்கு ஆறுதலளிப்பதற்காகச் செல்கிறார். அவருடைய ஐஏஎஸ் அதிகாரிகள் அந்த இல்லங்களில் அவசர அவசரமாகக் குளிர்சாதனப் பெட்டிகளை நிறுவி அவர் தலித் இல்லங்களுக்குச் சென்று வந்த மறுநாளே அவற்றைக் கழற்றிக்கொண்டு செல்கிறார்கள். பாஜக தலைவர் அமித் ஷா தலித் இல்லங்களுக்குச் சென்று டிவி கேமிராக்கள் முன்பு சிரமப்பட்டுத் தரையில் உட்கார்ந்து உணவருந்துகிறார்.

இப்படியெல்லாம் செய்தாலும் இவர்களுடைய ‘பாஸ்’ ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாக்வத், ‘தலித் இல்லங்களுக்குச் சென்று உணவருந்துவதுபோல நாடகமாடாதீர்கள். உண்மையிலேயே அவர்கள் மத்தியில் சென்று அவர்களுடன் ஐக்கியமாகுங்கள்’ என இவர்களைக் கடிந்துகொள்கிறார்.

ஐக்கியமா? தலித் மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும்போது உபி சஹாரன்பூரைச் சேர்ந்த சந்திரசேகர் ஆஜாத் ராவண் போன்ற இளம் தலித் தலைவர்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் ஓராண்டுக்கும் மேலாகச் சிறையிலடைத்து வைத்திருக்கிறார்கள். ஆற்றல்மிகு இளம் தலித் போராளிகளாக உதயமாகிவரும் ஜிக்னேஷ் மேவானி போன்ற தலைவர்களைப் பொதுக்கூட்டத்தில்கூடப் பேசவிடாமல் கெடுபிடி செய்கிறார்கள். இதையெல்லாம் செய்துவிட்டு தலித் மக்களோடு எப்படி ஐக்கியப்பட முடியும்? நடக்கிற கதையா இது?

இந்த மக்கள் நம்மை விட்டு விலகிப்போகிறார்களே, இது தேர்தலில் நம்மை பாதிக்குமே என ஆர்எஸ்எஸ் - பாஜக தலைவர்கள் உணர்ந்தாலும், இவர்களால் இந்தப் பிரச்சினைக்கான வேரைக் கண்டறிய முடியவில்லை. எனவே தற்காலிக நிவாரணத்துக்காகப் புனுகு பூசும் வேலையை மட்டுமே செய்கிறார்கள்.

2014 லோக் சபா தேர்தல் பிரச்சாரத்தின்போது நரேந்திர மோடி 100 நாள்கள் வேலைத்திட்டமான எம்ஜிஎன்ஆர்ஜிஏ (MGNREGA) திட்டத்தை உதவாக்கரைத் திட்டம் என்றும் தாம் ஆட்சிக்கு வந்தால் அதை ஒழித்துக்கட்டுவதே முதல் வேலை என்றும் அறிவித்தார். ஆட்சிக்கு வந்த இரு ஆண்டுகளில் இத்திட்டத்துக்கான நிதிஒதுக்கீட்டைக் குறைத்து மிகவும் பின்தங்கிய மூன்றில் ஒரு பங்கு மாவட்டங்களில் மட்டும் இதை அமலாக்க முயற்சித்தார். 200க்கும் மேற்பட்ட பொருளாதார வல்லுநர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியதால் இதில் தோல்வியடைந்தார். இத்திட்டத்தை ஒழிக்க யத்தனித்தாலும் தனது நிலைப்பாட்டைத் தலைகீழாக மாற்றிக்கொள்ளும்படி யதார்த்தங்கள் அவரை நிர்பந்தித்தன. சென்ற ஆண்டு மற்றும் இந்த ஆண்டு பட்ஜெட்டுகளில் அவரது அரசு எம்ஜிஎன்ஆர்ஜிஏ திட்டத்துக்கு ஏட்டளவிலாவது அதிக நிதி ஒதுக்கவேண்டிய நிர்பந்தத்துக்குள்ளானது. கிராமப்புற ஏழை மக்கள் தம்மை விட்டு விலகுகின்றனர் என்பது அவர்கள் புத்திக்கு எட்டிய பிறகே இந்த தலைகீழ் மாற்றம் நிகழ்ந்தது.

விவசாய நெருக்கடி என்பது என்ன?

விவசாய நெருக்கடியென்றால் விவசாயிகள் மட்டுமே நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறார்கள் எனப் பார்ப்பது பொதுவான நகர்ப்புறப் பார்வை. ஆனால், விவசாயத் தொழிலாளர்களும் கிராமப்புறப் பாட்டாளிகளும் அதே அளவுக்கு நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறார்கள். பஞ்சாப் போன்ற சில பகுதிகளில் இவர்கள் சந்திக்கும் நெருக்கடி, விவசாயிகள் நெருக்கடிக்குக் குறைந்ததல்ல. ஆனால், இது ஊடகங்கள் மற்றும் அரசு வட்டாரங்களில்கூட அங்கீகரிக்கப்படுவதில்லை. விவசாயிகளுடைய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன, மின்சக்தி / டீசல், உரங்கள், விதைகள் போன்ற சில இடுபொருள்களுக்கு மானியமளிக்கப்படுகிறது, விவசாயிகளுடைய உற்பத்திப் பொருள்களுக்கு அவ்வப்போது கூடுதல் விலையும் அளிக்கப்படுகிறது. ஆனால், விவசாயத் தொழிலாளர்களுக்கு அவர்களுடைய வாழ்வாதார நெருக்கடியிலிருந்து மீள எந்த நிவாரணமும் அளிக்கப்படுவதில்லை. அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் விவசாயிகளின் நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு எதையும் காண முடியவில்லை என்பது மட்டுமல்ல; விவசாயத் தொழிலாளர் நெருக்கடி அவர்கள் பார்வையிலேயே படவில்லை. விவசாயத் தொழிலாளர்களுள் கணிசமானவர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஆட்சியாளர்கள் பாராமுகமாக இருந்துவந்துள்ளனர்.

எடுத்துக்காட்டாக, விவசாயத் துறையினர் தற்கொலைகளை எடுத்துக்கொள்வோம். அரசாங்கம் முதற்கொண்டு எதிர்க்கட்சியினர் வரை, ஊடகத்தினர் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை விவசாயிகளின் தற்கொலைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறார்களே தவிர, விவசாயத் தொழிலாளர் தற்கொலைகளைப் பற்றி பேசுவதே இல்லை. விவசாயத் தொழிலாளர் தற்கொலைகள், அவை குறித்து பேசுமளவுக்கு முக்கியத்துவம் இல்லாத அளவுக்குச் சொற்ப எண்ணிக்கையிலானவையா? இல்லவே இல்லை. 2016ஆம் ஆண்டு விவசாயத் துறை நெருக்கடியால் 6,351 விவசாயிகளும் 5,019 விவசாயத் தொழிலாளர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக 21 மார்ச் 2018 ஆண்டு மக்களவையில் இளநிலை விவசாய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா தேசிய க்ரைம் ரெக்கார்டஸ் பீரோ (NCRB) புள்ளிவிவரங்களை ஆதாரமாகக் கொண்டு தெரிவித்தார். விவசாயத் தொழிலாளர் தற்கொலை எண்ணிக்கை, விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கையில் 79%. அவர்களுக்கு நிலம் இல்லாதபடியாலும் அவர்கள் வங்கிக்கடன் பெற்றிராததாலும் அவர்களுக்கு நஷ்டஈடு எதுவும் கிடைப்பதில்லை. ஆனால், அவர்களும் கந்து வட்டிக்காரர்களிடமிருந்து கடன் வாங்கியுள்ளனர். இந்தக் கடன்தான் இவர்களை முதற்கண் தற்கொலையை நோக்கித் தள்ளிவிட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தைத் தவிர இடதுசாரிகள் ஆளும் கேரளம் உள்பட வேறெந்த மாநிலத்திலும் விவசாயத் தொழிலாளர்களுக்கு விவசாயத் துறை நெருக்கடியால் நிவாரணம் எதுவும் கிடைப்பதில்லை.

பஞ்சாப் அரசாங்கம் விவசாயத் துறை தற்கொலைகளைப் பற்றிய ஆய்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது. பாட்டியாலா பஞ்சாபி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு ஒன்று ஃபரித்கோட், ஃபத்தேகார் சாஹிப், ஹோஷியார்பூர், பாட்டியாலா, ரூப்நகர், எஸ்ஏஎஸ் நகர் மற்றும் முக்த்சார் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டது. லூதியானா பஞ்சாப் விவசாயப் பல்கலைக்கழகத்தையும் அம்ரித்சர் குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தையும் சேர்ந்த ஆசிரியர்களைக் கொண்ட மற்றொரு குழு சாங்ரூர், பட்டிண்டா, மானசா, பர்னாலா, லூதியானா மற்றும் மோகா ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்தது. முதல் குழு அந்த ஏழு மாவட்டங்களில் 2010க்கும் 2016க்குமிடையே நிகழ்ந்த 737 விவசாயத் தற்கொலைகளில் 397 (53.87%) விவசாயத் தொழிலாளர் தற்கொலைகள் எனவும் இவற்றுள் 88.38% தற்கொலைகள் கடன் தொல்லையால் நிகழ்ந்தவை எனவும் தாம் கண்டறிந்தவற்றைப் பதிவு செய்தது. மேலும் விவரங்களுக்கு என்ற இணைய பக்கத்தைப் பார்க்கவும்.

விவசாயத் தற்கொலைகள் அதிகம் நிகழும் ஆறு மாவட்டங்களில் ஆய்வு செய்த இரண்டாவது குழு தாம் ஆய்வுசெய்த 2000இல் இருந்து 2015ஆம் ஆண்டு வரையிலான 14,667 விவசாயத் தற்கொலைகளில் 6,373 (44%) விவசாயத் தொழிலாளர் தற்கொலைகள் எனத் தெரிவித்தது. மேலும் விவரங்களுக்கு என்ற இணைய பக்கத்தைப் பார்க்கவும்.

தன்னால் அமைக்கப்பட்ட குழுக்களே இத்தகைய கண்டுபிடிப்புகளை முன்வைத்தபோதும் முதல்வர் அம்ரிந்தர் சிங் விவசாயத் தொழிலாளர் கடன்பட்டிருக்கும் நிலை குறித்த ரெக்கார்டுகள் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என சாக்குச் சொல்லி அவர்களுக்கு நஷ்டஈடு வழங்க மறுத்துவிட்டார்.

விவசாயிகள் மத்தியில் நிகழ்வதுபோலவே கிராமப்புற மற்றும் விவசாயத் தொழிலாளர் நெருக்கடியும்கூடச் சில பகுதிகளில் தற்கொலை போன்ற தீவிர வெளிப்பாட்டைப் பெறுகின்றன. ஆனால், இந்த நெருக்கடியோ நாடெங்கும் பரவலாகப் பரவிப் பொதுவானதொன்றாக ஆகியுள்ளது. வேதனையால் இடம்பெயர்வது, சிறுநீரகங்களை விற்பது, குடிபோதை போன்ற இதர வெளிப்பாடுகளையும் பெறுகிறது. தொழிலாளர் தற்கொலைகள் களத்தில் விவசாயிகளின் தற்கொலைகளுக்கு நிகராக அவற்றுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் அளவுக்கு இருந்தாலும் விவசாயிகளின் தற்கொலைகள் முக்கியத்துவம் பெறுமளவுக்கு இவை பொது விவாதங்களில் இடம்பெறுவதில்லை. இது ஆராய்ச்சியாளர்களாலும் போதிய அளவு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுவதில்லை. இருப்பினும் கிராமப்புறத் தொழிலாளர் வேதனை அரசியல் பிரச்சினையாகவோ அல்லது தேர்தல் பிரச்சினையாகவோ உருவெடுக்குமா?

விவசாயத் தொழிலாளர் என்னும் அரசியல் சக்தி

ஒப்பீட்டளவில் மேம்பட்ட சமூக, பொருளாதார நிலைமையில் இருப்பதால் விவசாயிகள் பாரம்பரியமாக அரசியலில் உரத்துக் குரலெழுப்புபவர்களாக இருந்துவந்துள்ளனர். ஆனால், மக்கள்தொகை எண்ணிக்கைப்படி பார்த்தால் விவசாயத் தொழிலாளர்களும் கிராமப்புறத் தொழிலாளர்களும் விவசாயிகளைவிட அதிக எண்ணிக்கையிலுள்ளனர். எனவே, தேர்தல் கோணத்திலிருந்து பார்த்தால் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பிரிவாக உள்ளனர். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டின் 121.06 கோடி மக்கள் தொகையில் கிராமப்புற மக்கள்தொகை 83.35 கோடி. இவர்களுள் கிராமப்புறத்தில் பணிபுரிவோர் எண்ணிக்கை 34.86 கோடி. இவர்களுள் 11.50 கோடி (மொத்த பணிபுரிவோர் சக்தியில் 33%) விவசாயிகளாவர். 13.70 கோடி (மொத்த பணிபுரிவோர் சக்தியில் 39.3%) விவசாயத் தொழிலாளர்.

இதன் பொருள் என்னவென்றால் விவசாயிகள் வாக்காளர்களைவிட விவசாயத் தொழிலாளர் வாக்காளர்கள் 20% அதிகம். அரசியல் கட்சிகள் வாக்கொன்றுக்கு ரூ.3,000இல் இருந்து ரூ.5,000 வரை விலைகொடுத்து வாங்க முன்வரும் இந்தக் காலகட்டத்தில் தனியொரு வாக்காளர் தொகுதி என்ற வகையில் விவசாயத் தொழிலாளர்கள் மிகவும் முக்கியமானதொரு சக்தி. அவர்களுடைய மவுனக் கோபம் விவசாயிகளின் சீற்றத்தோடு இணைந்து 2019 தேர்தலில் பாஜகவைச் சுட்டெரித்தாலும் எரிக்கலாம்.

நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் கிராமப்புற மற்றும் விவசாயத் தொழிலாளர் நெருக்கடி எந்த அளவுக்குத் தீவிரமானது? இந்நெருக்கடியின் பின்னுள்ள காரணங்கள் எவை? தொடர்ந்து அலசுவோம்...

(கட்டுரையின் தொடர்ச்சி நாளைக் காலை...)

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

வியாழன் 17 மே 2018