தமிழக அரசு சார்பாக வாங்கப்படவுள்ள பேருந்து மாதிரிகளின் கைப்பிடியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மானிய கோரிக்கைகளுக்காக வரும் 29ஆம் தேதி தமிழகச் சட்டப் பேரவைக் கூட்டம் கூடுகிறது. அதையொட்டி, தலைமைச் செயலகத்தில் நேற்று (மே 16) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுற்றுலாத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சட்டத் துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டங்கள் நடைபெற்றன.
தமிழகப் போக்குவரத்துத் துறை 2,000 புதிய பேருந்துகள் வாங்கவிருக்கும் நிலையில் நேற்று (மே 16), புதிய பேருந்து மற்றும் சிற்றுந்து வாகன மாதிரிகளைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வானது தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்றது.
தமிழக முதல்வர் ஆய்வு செய்த பேருந்து மாதிரிகளின் கைப்பிடியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளதைப் போன்ற காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
முன்னாள் முதல்வர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் பொங்கல் பைகளில் இடம்பெறுவதையே கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு சார்பாக வாங்கப்படவுள்ள பேருந்து மாதிரிகளின் கைப்பிடியில் முதல்வர், துணை முதல்வர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், புதிய பேருந்து மற்றும் சிற்றுந்துகளில் முன்பக்க, பின்பக்க கூரைகளில் சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்தின்போதும் அறிவிக்க ஏதுவாக ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு மைக் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
முன்னதாக, முதல்வர் பழனிசாமியை “சாமி” என்று சித்திரித்து தியேட்டர்களில் வெளியான விளம்பரமானது, கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகு தமிழக அரசால் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.