மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 ஆக 2020

மனித உரிமைகள் ஆணையத்தில் தேசியப் புலனாய்வு அதிகாரியா?

மனித உரிமைகள் ஆணையத்தில் தேசியப் புலனாய்வு அதிகாரியா?

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராக இந்துத்துவ சக்திகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட முன்னாள் தேசியப் புலனாய்வுத் துறைத் தலைவரை நியமிக்க மனித உரிமைகள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அனைத்திந்திய மனித உரிமைகளின் கூட்டமைப்பு மற்றும் சிவில் உரிமைகள் அமைப்புகள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்தப் புகார் மனுவில் கூறியுள்ளதாவது:

“காவல் துறையினரின் மற்றும் பாதுகாப்புப் படைகளின் மனித உரிமைகள் மீறல்களுக்காக தேசிய மனித உரிமைகள் ஆணையம் அவர்களின் வழக்குகளை விசாரித்து வரும்வேளையில் தேசியப் புலனாய்வுத் துறை அமைப்பின் முன்னாள் இயக்குநர் சரத்குமாரை ஆணையத்தின் உறுப்பினராக நியமிப்பது தவறான செய்தியை மக்களுக்கு அளிக்கும்.

சரத்குமார் தேசியப் புலனாய்வுத் துறை இயக்குநராக இருந்தபோது இந்துத்துவ அமைப்புகளின் பயங்கரவாத குற்றங்கள் குறித்த வழக்குகளை விரைந்து முடிப்பதிலும் குற்றவாளிகளை விடுதலை செய்வதிலும் மிகுந்த அக்கறை காட்டினார். இதனால் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானவர்.

குமாரின் தொழில் பின்னணியும் அவரைச் சுற்றியிருக்கும் சர்ச்சைகளும் அவர் இந்தப் பதவிக்கு பொருத்தமானவராகக் காட்டவில்லை. அவர் இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டால், அது சர்வதேச ரீதியாக ஐநாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் தரங்களுக்கு எதிராக அமையும்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் நியமனங்கள் பகிரங்கரமாக வெளியிடப்பட வேண்டும். அவரைப் போன்றோர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டால் அது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் செயல்பாட்டுக்கும் அதன் பெருமைக்கும் ஊறு விளைவிக்கும். ஆணையத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சீர்குலைப்பதாகும்.

எனவே, குடியரசுத் தலைவர் இப்பிரச்சனையில் தலையிட்டு சர்வதேச மனித உரிமைத்தரங்களின்படி உறுப்பினரை நியமிக்க வேண்டும்.”

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon