மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 மே 2018

சிறப்புக் கட்டுரை: நிலையாக இருப்பதுதான் நிலைப்பாடா?

சிறப்புக் கட்டுரை: நிலையாக இருப்பதுதான் நிலைப்பாடா?

அ.குமரேசன்

நெடும் போராட்டத்தின் வெற்றியாக நெடுவாசலிலிருந்து வெளியேறி வேறு இடம் பார்க்க அந்தத் தனியார் ஹைட்ரோ கார்பன் நிறுவனம் முடிவு செய்தது. இது பற்றிய ஒரு விவாதத்தின்போது, போராட்டத்தின் காரணமாக அந்த நிறுவனம் திட்டத்தைக் கைவிட முடிவு செய்ததாகக் கூற முடியாது, இதற்கான உரிமத்தை மாற்றிக்கொடுக்காமல் தமிழக அரசு இழுத்தடித்துவிட்டதால்தான் இந்த முடிவு என்று திட்டத்தின் ஆதரவாளர் ஒருவர் விளக்கமளித்தார். இந்த விளக்கத்தை அளிப்போர் மத்திய ஆளுங்கட்சியோடு தொடர்புள்ளவர்களாக இருப்பது தற்செயலானதுதானா? இந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராடாத கட்சி தமிழகத்தில் வேறு எதுவும் இல்லை.

அதே விவாதத்தின்போது, இந்தத் திட்டம் இங்கே வரப்போகிறது என்று தெரிந்தபோதே திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஏன் எதிர்க்கவில்லை என்று கேட்கப்பட்டது. இன்று மக்களோடு நின்று இத்திட்டத்தை எதிர்த்த கட்சிகளில் சில அன்றைக்கு எதிர்க்கவில்லை என்பது மட்டுமல்ல; ஆதரிக்கவும் செய்தார்களே என்ற விமர்சனமும் வைக்கப்படுகிறது. அரசியலுக்காகத்தான் அந்தக் கட்சிகள் தங்கள் முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு தற்போது எதிர்க்கின்றன, எதிர்க்கட்சிகள் என்பதால் இப்படிப்பட்ட வளர்ச்சித் திட்டங்களை அரசியலாக்குவது சரியா என்றும் அக்கேள்வி விரிவடைந்தது.

இக்கேள்விகளுக்கு மூன்று பதில்களைக் கூறலாம்.

முதல் பதில்: தமிழக அரசு அந்த உரிமத்தை மாற்றாமல் விட்டதே போராட்டத்தின் எழுச்சியால்தான். மாநில அரசு அப்படி முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியதே நெடுவாசல் மக்களும் அவர்களுக்கு ஆதரவாக அனைத்து எதிர்க்கட்சிகளும் தமிழகத்தின் இதர பகுதி மக்களும் நடத்திய போராட்டம்தான்.

இரண்டாவது பதில்: எந்தவொரு பிரச்சினையுமே அரசியலாக்கப்படுவது நல்லதுதான். இந்தத் திட்டத்தைத் தொடங்க முடிவு செய்ததில், அதற்கான ஒப்பந்தத்தை அந்தத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்ததில் அரசியல் இல்லையா என்ன? ஒரு பிரச்சினை அரசியலாக்கப்படுகிறது என்றால் அது மக்கள் ஆதரவைப் பெறுகிறது என்றுதான் பொருள், அதுவே பிரச்சினைக்கான தீர்வு.

மூன்றாவது பதில்: ஓர் அரசியல் கட்சியோ, மக்கள் அமைப்போ, தனி மனிதர்களோ தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளக் கூடாதா? ஒரு தவறான நிலைப்பாட்டை மேற்கொண்டுவிட்டதால் கடைசி வரையில் அதே நிலைப்பாட்டில் நிற்க வேண்டுமா? சரியான நிலைப்பாட்டுக்கு வரக் கூடாதா? தவறான நிலைப்பாட்டுக்காக விமர்சிக்கிறவர்கள், பின்னர் சரியான நிலைப்பாட்டுக்கு வருகிறபோது அதையும் விமர்சிப்பதுதான் விந்தை. சொல்லப்போனால், நெடுவாசல் பிரச்சினையில் அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டுக்கு வந்து ஒருமித்த குரலில் எதிர்ப்புத் தெரிவித்ததேகூட மக்கள் போராட்டத்தின் வெற்றிதான்.

நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் சுதந்திரம்

இங்கே நாம் நெடுவாசல் பிரச்சினை பற்றியல்லாமல் கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பாகவே விவாதிக்கவிருக்கிறோம். ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டுவிட்டால் அதில் மாறாமல் இருப்பதே கம்பீரம், அதிலிருந்து மாறுவது இழுக்கு என்ற எண்ணம் காலங்காலமாகப் புகட்டப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்கிற சுதந்திரமும் அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொள்கிற சுதந்திரமும் சமமானவை. பயணத்தின் இலக்குகளையும் பாதைகளையும் மாற்றிக்கொள்ளாமலே இருந்தால் பழைய இடங்களையே சென்றடைந்து கொண்டிருப்போமேயன்றி, புதிய வெளிகளை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. கருத்துகளையும் நிலைப்பாடுகளையும் மாற்றிக்கொள்ளாமலே இருந்தால் தத்துவங்களும் இயக்கங்களும் தேங்கிப்போவதைத் தடுக்க முடியாது.

பொதுவாக அரசியல் கட்சிகள் பலவும் எந்தவொரு பிரச்சினையிலும் அப்போதைய நிலைமைக்கேற்ப முடிவெடுத்துக்கொள்கின்றன என்பதென்னவோ உண்மைதான். ஏற்கெனவே மேற்கொண்ட நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது கொள்கைப் புரிதலின் அடிப்படையிலா அல்லது ஆதாய அறுவடை நோக்கத்துடனா என்று விமர்சிக்கலாமேயன்றி, அதை மாற்றிக்கொண்டதைக் குற்றமாக்கக் கூடாது.

தனி மனிதராக ஒருவர் அல்லது அமைப்பாக ஒரு கட்சி தனது முந்தைய நிலைப்பாடுகளையும் கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் மாற்றிக்கொள்ளவே கூடாதா? ஒரு நிலைப்பாட்டை அறிவித்துவிட்டதால் முடிவே இல்லாமல் அதற்கு மட்டுமே விசுவாசமாக இருந்தாக வேண்டுமா? அப்படி இருப்பதற்கு அரசியல் களம் என்ன ஆன்மிகத் தளமா? ஆன்மிகத்தில்தான் ஒரு மதம் கூறுகிற கடவுள், அந்தக் கடவுளுடன் ஐக்கியமாவதற்கான வழிபாட்டு முறை, அந்த வழிபாட்டு முறையோடு இணைந்த வாழ்க்கை முறை ஆகியவை - எப்போதோ, எங்கோ, அப்போதைய சூழலுக்கும் அங்கிருந்த நிலைமைகளுக்கும் ஏற்ப வகுக்கப்பட்டவையாக இருந்தாலும் - மாற்றவே முடியாத புனிதக் கோட்பாடுகளாகப் பராமரிக்கப்படுகின்றன. யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காகவே அவை யாவும் எல்லாம்வல்ல இறைவனால் அருளப்பட்டவை என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

ஆனால், மதம்கூடத் தனது நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. சூரியனைத்தான் பூமி சுற்றுகிறது என்ற இயற்கை உண்மையை அறிவியலாளர் கலிலியோ சொன்னதற்காக அன்றைய திருச்சபையினர் அவரை விசாரணைக் கூண்டிலேற்றி அவமானப்படுத்தினார்கள். பின்னாளில் போப் இரண்டாம் ஜான் பால் அதற்காக மன்னிப்புக் கோரினார். மதத்துக்குள் ஒரு சீர்திருத்த எழுச்சியாகப் புறப்பட்ட பிராட்டஸ்டண்ட் இயக்கத்தினர் மீது நடத்தப்பட்ட வன்முறைகளுக்காகவும் போப் வருந்தினார். கத்தோலிக்கத் தலைமையகத்தின் முந்தைய பல நிலைப்பாடுகளை இவ்வாறு வெளிப்படையாக மன்னிப்புக் கோரியதன் மூலம் மாற்றினார்.

மாற்றம் எப்படி அமைய வேண்டும்?

நேர்மையான இயக்கம் தனது நிலைப்பாடு சரியானதுதான் என்று கருதுமானால், இழப்புகள் பற்றிக் கவலைப்படாமல் அதற்காகவே வாதாடும். அறிவார்ந்த உட்கட்சி விவாதங்களின் அடிப்படையிலோ, அனுபவம் சார்ந்த படிப்பினையின் அடிப்படையிலோ முந்தைய நிலைப்பாடு தவறென உணர்ந்தால் அதைத் தயக்கமின்றி ஒப்புக்கொள்ளும். இவ்வாறு குறிப்பிட்டதொரு நிலைப்பாட்டுக்காக வாதாடுவதும், அது தவறென உணர்கையில் மாற்றிக்கொள்வதும் ஜனநாயகப் பண்பு. கட்சி அமைப்புக்குள் சரியான நிலைப்பாட்டை முன்வைத்தவர்களின் வெற்றியும்கூட.

பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது, அவைக் கூட்டங்களை முடக்குவதை ஒரு வியூகப் பழக்கமாகவே கொண்டிருந்தது. ஆளுங்கட்சியாக மாறிய பிறகு, எதிர்க்கட்சிகள் இதே யுக்தியைக் கையாள்கிறபோது, நாடாளுமன்ற நெறிகள் பற்றிப் பேசுகிறது. அன்று சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு, ஆதார் அட்டை போன்றவற்றைக் கடுமையாக எதிர்த்துவிட்டு, ஆட்சிக்கு வந்தபிறகு அதே நடவடிக்கைகளை முந்தைய காங்கிரஸ் அரசை விடவும் தீவிரமாகச் செயல்படுத்துகிறது.

இப்படி நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளலாமா என்றால் தாராளமாக மாற்றிக்கொள்ளலாம். ஆனால், அப்படி மாற்றிக்கொண்டதற்கான காரணத்தை மக்களிடம் சொல்ல வேண்டும். முன்பு எதிர்த்தது தவறு, இப்போது அந்த நடவடிக்கைகள் தேவை எனக் கருதுகிறோம் என்றாவது சொல்ல வேண்டும் அல்லவா? மாறாக “முந்தைய அரசு கொண்டுவந்த சட்டங்களில் இருந்த குறைபாடுகளை நீக்கி இப்போது நாங்கள் செயல்படுத்துகிறோம்” என்பதாகவே பாஜக விளக்கங்கள் இருக்கின்றன. இப்படி மழுப்புவதே அவர்களின் நிலைப்பாடு போலும்.

இதை அப்படியே காங்கிரஸுக்கு மாற்றிப்போட்டுக் கேட்கலாம். உங்கள் அரசு கொண்டுவந்ததைத்தானே பாஜக அரசு செயல்படுத்துகிறது, பிறகு ஏன் எதிர்க்கிறீர்கள் என்று கேட்டுப்பாருங்கள். “நாங்கள் கொண்டுவந்த சட்டங்களில் மக்களுக்குப் பாதுகாப்பான ஏற்பாடுகள் இருந்தன. இந்த அரசு அவற்றை விலக்கிவிட்டதால் எதிர்க்கிறோம்” என்பார்கள்.

தமிழக ஆளுங்கட்சி பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. அவர்கள் தெய்வமாக வணங்குகிற ஜெயலலிதா எதையெல்லாம் உறுதியாக எதிர்த்தாரோ அந்த நீட், உதய் மின் திட்டம், ஜிஎஸ்டி போன்றவற்றை, வேறெவரையும்விட விசுவாசமாகச் செயல்படுத்துகிறது எடப்பாடி பழனிசாமி அரசு. நீட் எதிர்ப்பில் இன்று முன்னணியில் இருக்கும் எதிர்க்கட்சியான திமுக, முன்பு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் இடம்பெற்றிருந்தபோது நீட் தேர்வை அறிமுகப்படுத்த அந்த அரசு எடுத்த நடவடிக்கையை எதிர்த்துத் தடுக்காதது ஏன் என்ற கேள்விக்கு ஏற்கத்தக்க பதில் அக்கட்சியிடமிருந்து வரவில்லை.

கூடங்குளம் அணுமின் திட்டத்தை ஆதரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பின்னர் அங்கே தொகுப்பாக உலைகள் ஏற்படுவதை எதிர்த்து, கூடங்குளம் மக்களோடு கைகோத்து நிற்கிறது. நாட்டில் எங்குமே தொகுப்பு அணு உலைகள் அமைக்கப்படக் கூடாது, படிப்படியாக அணுமின் திட்டங்களே நிறுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்தது அக்கட்சி. நியூட்ரினோ ஆய்வுக்கூடத் திட்டம் தொடர்பாகவும், முந்தைய நிலைப்பாட்டிலிருந்து மாறி, மக்களின் அச்சத்தைப் போக்காமல் அதைத் தொடங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளது.

இப்படிப் பல கட்சிகள் தங்கள் முந்தைய நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டது பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி மாற்றிக்கொள்வது நிச்சயமாகத் தவறில்லை, இன்ன காரணத்தால் மாற்றிக்கொண்டோம் என்று விளக்கமளிக்கத் தவறுவதுதான் தவறு.

அதேபோல், குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை முன்னுக்கு வந்தபோது, சமூகப் பொருளாதாரச் சூழல் மாறுகிற வரையில் பல ஏழைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது தொடரத்தான் செய்யும் என்ற வாதத்தைத்தான் முன்பு தொழிற்சங்கங்கள் முன்வைத்தன. பணியிடங்களில் அந்தக் குழந்தைத் தொழிலாளர்களின் உரிமைகள், பாதுகாப்பு போன்றவற்றை வலியுறுத்தின. ஆயினும், தொடர்ச்சியான உள் விவாதங்களின் பயனாக, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற மனித உரிமைச் செயல்பாட்டாளர்களின் முழக்கம், தொழிற்சங்க முகாமிலிருந்தும் ஒலிக்கத் தொடங்கியது. இந்த மாற்றத்தை வரவேற்பது முக்கியமா, முன்பு எதிர்க்காமல் விட்டது ஏன் என்று விமர்சித்துக்கொண்டிருப்பது முக்கியமா?

கம்யூனிஸ்ட்டுகள் பொருளாதாரப் பிரச்சினைகளில் உடனுக்குடன் எதிர்வினையாற்றுவதுபோல சாதியம் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளை எடுத்துக்கொள்வதில்லை என்ற விமர்சனம் முன்பு ஒலித்துக்கொண்டிருந்தது. அன்றைய கம்யூனிஸ்ட் தலைவர்களின் சாதிப் பின்னணிதான் இதற்குக் காரணம் என்று சித்திரிக்க முயன்றவர்களும் உண்டு. வர்க்கப் போராட்டம் வெற்றிபெற்றால் மற்ற பிரச்சினைகள் தாமாகவே உதிர்ந்துவிடும் என்பதான, வளர்பருவப் புரிதல் குறைபாடுதான் இந்தப் போதாமைக்குக் காரணம் என்று சுட்டிக்காட்டியவர்களும் உண்டு. இயக்கத்துக்கு உள்ளேயும் இந்த விவாதம் உண்மையான அக்கறையோடு நடந்தது என்பதன் வெளிப்பாடாக, இன்று சாதிய வன்மம், மத மாற்ற உரிமை, ஆலய நுழைவுரிமைத் தடுப்பு, பெண்களுக்கு எதிரான பாலினப் பாகுபாடுகள் ஆகியவை உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளில் உடனடியாகத் தலையிடுகிற முக்கியமான மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதை அங்கீகரிக்க மனமில்லாமல், பழைய கதைகளையே கிளறிக்கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்.

“யார்தான் செய்யவில்லை?”

இப்படியாகக் காலண்டரின் கிழிபட்ட பழைய தேதிகளுக்குள்ளேயே உழன்றுகொண்டிருப்பது ஒரு மனநிலை என்றால், தங்களை நோக்கிக் கேள்விகள் வருகிறபோது “யார்தான் இப்படிச் செய்யவில்லை?” என்று எதிர்க்கேள்வி போடுவது ஒரு யுக்தி.

மத்திய பாஜக அரசு விவசாய மானியங்களில் கைவைப்பது பற்றிக் கேட்டால் முந்தைய ஆட்சிக் காலத்தின் ஏதாவது ஓர் ஆண்டைக் குறிப்பிட்டு, அந்த ஆண்டில் காங்கிரஸ் இதைச் செய்யவில்லையா என்று கேட்பார்கள். விஜய் மல்லையாக்களையும் நீரவ் மோடிகளையும் தப்பவிட்டது சரியா என்று கேட்டால் காங்கிரஸ் ஆட்சியின்போது இதேபோல் தப்பவிடப்பட்டவர்களின் பட்டியலை வாசிப்பார்கள். மதவெறி வன்முறைகள் அதிகரித்துள்ளது பற்றிக் கேட்டால், காங்கிரஸ் ஆட்சியில்தான் நிறைய வன்முறைகள் நடந்தன என்பார்கள்.

ஆன்மிகம் பேசுகிற மதத் தலைவர்களும் இதே யுக்தியைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். ஒரு மதத் தலைவரிடம், அவர்களது மதத்தில் உள்ள பெண்ணடிமைத்தனம் பற்றிக் கேட்கிறவர்களுக்கு, வேறொரு மதத்தைக் குறிப்பிட்டு அந்த மதத்தில் இது போன்ற நடைமுறைகள் இல்லையா என்று பதில் கூறுவார்கள்.

முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உலா வருகிற மதப்பற்றாளர்கள், அவர்களது மதத்தைச் சேர்ந்த சிலரது அத்துமீறல்கள் பற்றிய பதிவுகளுக்கான பின்னூட்டமாக, வேறு மதத்தைச் சேர்ந்த சிலர் எப்போதோ செய்த அத்துமீறல் செயல்களைக் குறிப்பிட்டு, அப்போது எங்கே போயிருந்தீர்கள் என்று கேட்பதைக் காணலாம். இப்படிக் கேட்பதன் மூலம் தங்களின் மதத்தைச் சேர்ந்தவர்களின் அத்துமீறல்களை ஒப்புக்கொள்வதைப் புரிந்துகொள்கிறார்களா என்பது சுவையான கேள்விதான்.

காந்தியின் அரசியல், சமூகப் பார்வை ஆகியவை தொடர்பான பல கடுமையான விமர்சனங்கள் எனக்கு உண்டு. ஆனால், நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வது பற்றிய விமர்சனங்கள் தொடர்பாக அவர் கூறிய கருத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

“எனது கருத்தை மாற்றிக்கொண்டதாக விமர்சிக்கிறார்கள். மாறுபட்ட கருத்தைக் கூறுகிறேன் என்றால் முந்தைய கருத்தை மாற்றிக்கொண்டேன் என்றுதான் அர்த்தம். இரண்டாவதாக என்ன சொல்லியிருக்கிறேனோ... அதுவே எனது இன்றைய நிலைப்பாடாகக் கொள்க” என்றார் காந்தி. யார்தான் கருத்துகளை மாற்றிக்கொள்ளவில்லை என்று கேட்டு நழுவாமல் தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டதன் நேர்மையும், இரண்டாவது கருத்தையே எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதன் மேன்மையும் மனதில் கொள்ளத்தக்கவை.

தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

5 நிமிட வாசிப்பு

தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

மீண்டும் கொரோனா: சென்னையில் கட்டுப்பாடுகள்!

3 நிமிட வாசிப்பு

மீண்டும் கொரோனா: சென்னையில் கட்டுப்பாடுகள்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

வியாழன் 17 மே 2018