ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கிரிக்கெட்டுக்கு மற்ற விளையாட்டுகளைவிட இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். அதனாலே இந்தியாவில் ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக 11ஆவது ஆண்டை எட்டியுள்ளது. பெரும்பாலும் ஆண்களால் விரும்பப்படும் விளையாட்டு எனும் கற்பிதத்தை மாற்றியுள்ளது சமீபத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பு.
ஐபிஎல்லின் இந்தத் தொடரை தொலைக்காட்சி, இணையம் வழியாக நேரடி ஒளிபரப்பில் பார்ப்போர்களின் பட்டியல் முதல் நான்கு வார முடிவில் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் மொத்த பார்வையாளர்களில் 40 சதவிகிதம் பேர் பெண் பார்வையாளர்கள் ஆவர். இது கடந்த ஆண்டை விட 18 சதவிகிதம் அதிகமாகும்.
2017ஆம் ஆண்டில் முதல் நான்கு வாரத்தில் 60.6 கோடி பெண் பார்வையாளர்களின் எண்ணிக்கை இருந்த நிலையில் இந்த ஆண்டு அது 71.7 கோடியாக உயர்ந்துள்ளது.
போட்டிகள் பார்க்கும் பெண்கள் சராசரியாக செலவழிக்கும் நேரம் 31.07 நிமிடங்களிருந்து 33.09 நிமிடங்களாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ஏழு சதவிகிதம் அதிகமாகும்.
இதில் கவனிக்கக்கூடிய விஷயம் சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற நகர்ப்புறங்களில்தான் இந்தப் போட்டிகளை அதிக அளவிலான பெண் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். கிராமப்புறங்களில் இதன் தாக்கம் குறைவாகவே உள்ளது.