மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

‘மை’ குறித்த சில உண்மைகள்!

‘மை’ குறித்த சில உண்மைகள்!

தினப் பெட்டகம் – 10 (17.05.2018)

டிஜிட்டல் காலத்துக்கு முன்புவரை, நாம் ஒரு விஷயத்தைப் பல மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்றால், அதற்கு முக்கியமான ஒரே ஊடகம் அச்சு ஊடகமாக இருந்தது. பல ஆயிரம் ஆண்டுகள் முன்பு இருந்து இப்போது வரையிலான, பல அழியாத செய்திகள் வண்ணங்களால், மையால் எழுதப்பட்டவை. இந்த மை பற்றிய சில அழகான தகவல்கள்:

1. முதன்முதலில் புகைக்கரி அல்லது சாம்பலைத் தண்ணீர், எண்ணெய், மிருகங்களில் இருந்து கிடைக்கும் கொழுப்பு அல்லது ஜெலட்டினோடு கலந்து மையாகப் பயன்படுத்தியிருக்கின்றனர்

2. மை விஷத்தன்மை உடையது. அதில் கலந்திருக்கும் பொருள்கள் மற்றும் நிறமிகளைப் பொறுத்து அதன் தன்மை மாறுபடும். தலைவலி முதல் நரம்பு மண்டல பாதிப்பு வரை ஏற்படலாம்.

3. பெரும்பான்மையான மைகள், எண்ணெய் உலோகம் போன்றவற்றை அடிப்படைப் பொருளாகக் கொண்டு செய்யப்படுகிறது. இது சுற்றுச்சூழல் மீது அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

4. மை 4,500 வருடங்கள் பழைமையானது.

5. ரத்தத்தைப் பயன்படுத்தி கடிதம் எழுதவோ, ஓவியம் தீட்டவோ திட்டமிடுகிறீர்களா? வேண்டாம் பாஸ்! மை ஒப்பீட்டளவில் சீக்கிரமாக அழிந்துவிடும். அதன் நிஜமான நிறம் மறைந்து மங்கிப் போய்விடும். அதனால், வேறு எதாவது வழியைப் பயன்படுத்தலாம்!

6. Squid எனப்படும் மீனிலிருந்து கிடைக்கும் மை, முன்காலத்தில் எழுத உபயோகப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது அது வழக்கொழிந்து போய்விட்டது. உணவுகளிலும், சில சாஸ்களிலும் அது கலக்கப்படுகிறது.

7. உலகிலேயே மிகவும் விலைமதிப்பான திரவங்களில் ஒன்று Inkjet printer மை. ஆனால், அதிக அளவில் பயன்படுத்தப்படுவதும் அதுதான்.

8. சுற்றுப்புறத்தின் மீது அக்கறை கொண்ட பலர் இருப்பதால், சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத மை, சோயாபீன்ஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

9. ஒரு காலன் பிரின்டர் மையின் விலை ஏறத்தாழ 10,000 டாலர்.

10. பல இடங்களில் இன்று உண்ணக்கூடிய மைகள் தயாரிக்கப்படுகின்றன. கேக் போன்ற பல பொருள்களில் இந்த மை பயன்படுத்தப்படுகிறது. சில உணவகங்களில் மெனு கார்டு கூட உண்ணக்கூடியதாக இருக்கிறது. இந்த மைகள், பல மணத்திலும் ருசியிலும் கிடைக்கின்றன!

ஆஸிஃபா

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon