மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

ஐபிஎஸ் அதிகாரிகள் பணி உயர்வில் சர்ச்சை!

ஐபிஎஸ் அதிகாரிகள் பணி உயர்வில் சர்ச்சை!

தமிழகம் முழுவதும் 30 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பணி உயர்வு மற்றும் இடம் மாற்றம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 30 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பணி உயர்வு அளித்தும் இட மாற்றம் வழங்கியும் தமிழக உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்ட்டி நேற்று (மே 16) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஐபிஎல் சூதாட்டப் புகார் குறித்து விசாரணை நடத்திய கியூ பிரிவு அதிகாரி சம்பத்குமார், வழக்கில் இருந்து சிலரை தப்ப வைக்க லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டபோது கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சம்பத்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ஐபிஎல் சூதாட்ட வழக்கை விசாரித்து வரும் விசாரணைக் குழுவானது சம்பத்குமார் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது. உரிய அனுமதி இன்றி ஊடகங்கள் மத்தியில் அவர் பேசியது தவறு என்பதை மட்டும் அந்தக் குழு குறிப்பிட்டது. இதையடுத்து கடந்த மார்ச் ஒன்றாம் தேதி அவருக்கான சஸ்பெண்ட் நடவடிக்கையை உள் துறை அமைச்சகம் ரத்து செய்தது. இந்த நிலையில், தற்போது அவர் வீராபுரம் தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு கடந்த பிப்ரவரி மாதம் தூத்துக்குடியில் நடைபெற்றது. மாநாட்டின் நிறைவையொட்டி அக்கட்சியின் செந்தொண்டர் படை பேரணி பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெற்றது. அப்போது காவல் துறைக்கும் செந்தொண்டர் படையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மாநகரக் காவல் உதவிக் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தடியடிக்கு உத்தரவிட்டார். இதில், நான்கு வயதுக் குழந்தை உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, தடியடி நடத்திய ஏஎஸ்பி செல்வ நாகரத்தினம் மற்றும் போலீஸாரை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சியினர் எஸ்பி மகேந்திரனிடம் புகார் மனு அளித்திருந்தனர். இந்த நிலையில், ஏஎஸ்பி செல்வ நாகரத்தினத்துக்கு எஸ்பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு திருவல்லிக்கேணி துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

செல்வ நாகரத்தினத்துக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிபிஐ(எம்) தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ச்சுனனைத் தொடர்புகொண்டு பேசினோம், “செல்வ நாகரத்தினத்துக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது தொடர்பாக தற்போதுதான் தகவல் கிடைத்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்தார்.

பணி உயர்வு மற்றும் இடமாற்றம் செய்யப்பட்ட பிற அதிகாரிகளின் பெயர்கள் பின்வருமாறு:

1. கன்னியாகுமரி தக்கலை சப்டிவிஷன் ஏஎஸ்பியான ஸ்ரீ அபினவ் எஸ்பியாக பதவி உயர்வு பெற்று சென்னை போக்குவரத்து (கிழக்கு) துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

2. சிதம்பரம் சப்டிவிஷன் ஏஎஸ்பியான என்.எஸ்.நிஷா எஸ்பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

3. தேஜஸ்வி குலச்சல் சப் டிவிஷன் ஏஎஸ்பியான சாய்சரண் எஸ்பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை, புளியந்தோப்பு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

4. திருவண்ணாமலை சப்டிவிஷன் ஏடிஎஸ்பியான ராவேளி பிரியா கந்தபுனேனி எஸ்பியாக பதவி உயர்வு பெற்று வண்ணாரபேட்டை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

5. ஈரோடு, சிறப்பு அதிரடிப்படை ஏஎஸ்பியாக இருக்கும் கே.பிரபாகர் எஸ்பியாக பதவி உயர்வு பெற்று சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

6. திண்டுக்கல், அமலாக்கப்பிரிவு ஏஎஸ்பியாக இருக்கும் எஸ்.எஸ்.மகேஷ்வரன் எஸ்பியாக பதவி உயர்வு பெற்று ராஜபாளையம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டண்ட்டாக மாற்றப்பட்டுள்ளார்.

7. பெண்களுக்கெதிரான ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு ஏஎஸ்பியாக இருக்கும் வி.ஷியாமளா தேவி எஸ்பியாக பதவி உயர்வு பெற்று சென்னை டிஜிபி அலுவலக ஏஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

8. திருவல்லிக்கேணி துணை ஆணையராக இருக்கும் பர்வேஷ் குமார் சிபிசிஐடி துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

9. புளியந்தோப்பு துணை ஆணையராக இருக்கும் சி.ஷியாமளா தேவி ஒருங்கிணைந்த அமலாக்கக் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

10. ஒருங்கிணைந்த அமலாக்கக் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக இருக்கும் சாந்தி, ஊனமஞ்சேரி போலீஸ் அகடாமி எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

11. ஊனமஞ்சேரி போலீஸ் அகடாமி எஸ்பி சாமூண்டீஸ்வரி மாற்றப்பட்டு சிபிசிஐடி சைபர் பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

12. வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் செஷாங் சாய் அடையாறு துணை ஆணையராக மற்றப்பட்டுள்ளார்.

13. அடையாறு துணை ஆணையராக இருக்கும் ரோஹித் நாதன் ராஜகோபால் சென்னை ரயில்வே எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

14. சென்னை ரயில்வே எஸ்பியாக இருக்கும் ஜார்ஜ் ஜார்ஜ் சேலம் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

15. சேலம் எஸ்பியாக இருக்கும் ராஜன் சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

16. ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக இருக்கும் ஜி.ஸ்டாலின் சேலம் அமலாக்கப்பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

17. டிஜிபி அலுவலக ஏஐஜியாக இருக்கும் கண்ணம்மாள் சென்னை (மத்திய) லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

18. சென்னை (மத்திய) லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாக இருக்கும் ஜெயலட்சுமி சென்னை (மேற்கு) லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

19. சென்னை (தெற்கு) லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாக இருக்கும் சரோஜ் குமார் தாகூர் திருச்சி ரயில்வே எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

20. திருச்சி ரயில்வே எஸ்பியாக இருக்கும் ஆன்னி விஜயா சென்னை போதைப்பொருள் கடத்தல் புலனாய்வு பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்

21. சென்னை போதைப்பொருள் கடத்தல் புலனாய்வு பிரிவு எஸ்பியாக இருக்கும் என்.தேவராஜன் எஸ்பி, சென்னை மெட்ரோ ரயில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.

22. திருப்பூர் மாவட்ட எஸ்பியாக இருக்கும் இ.எஸ்.உமா திருப்பூர் நகரப் போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

23. திருப்பூர் நகரப் போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு எஸ்பியாக இருக்கும் எ.கயல்விழி திருப்பூர் மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

24. திருச்சி சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக இருக்கும் சக்திகணேசன் ஈரோடு மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்

25. ஈரோடு மாவட்ட எஸ்பி டாக்டர் ஆர்.சிவகுமார் சென்னை போக்குவரத்து (மேற்கு) துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

26. சென்னை போக்குவரத்து (மேற்கு) துணை ஆணையர் ஈஸ்வரன் அம்பத்தூர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

27. அம்பத்தூர் துணை ஆணையர் சர்வேஷ்ராஜ் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு, சென்னை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

28. தமிழ்நாடு சிறப்பு காவற்படை பட்டாலியன் - 3 வீராபுரம் கமாண்டண்டாக இருக்கும் அந்தோணி ஜான்சன் ஜெயபால் தமிழ்நாடு சிறப்பு காவல்படை பட்டாலியன் - 2 சென்னை கமாண்டண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon