‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை அதிதி ராவ், தெலுங்கு ரசிகர்களையும் கவரும்விதமாகப் புது முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
எந்தவொரு நடிகர், நடிகையும் தன்னுடைய கதாபாத்திரத்துக்குத் தானே குரல் கொடுக்கும்போதுதான் தன்னை முழுமையான கலைஞன் என உணர்வார்கள். தனது சொந்தக் குரலில் பேச பல கலைஞர்கள் முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில் அதிதி ராவும் அத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
2007ஆம் ஆண்டு வெளியான சிருங்காரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அதிதி. அதன் பிறகு பாலிவுட் படங்களிலேயே அதிகம் கவனம் செலுத்தி வந்தார். மீண்டும் தமிழில் 2017ஆம் ஆண்டு பத்து வருட இடைவெளிக்குப் பிறகு நடித்த ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் மணிரத்னம் இயக்கும் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கிலும் சம்மோஹனம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். சுதீர் பாபு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்துக்கான பணிகள் முடிந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தனது சொந்த குரலிலே டப்பிங் பேசியுள்ளார் அதிதி. இந்தப் படம் வருகிற ஜூன் 15ஆம் தேதி வெளியாகிறது.