மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

சிறப்புக் கட்டுரை: இந்தியப் படைத் தளபதி இலங்கை சென்றது ஏன்?

சிறப்புக் கட்டுரை: இந்தியப் படைத் தளபதி இலங்கை சென்றது ஏன்?

டி.எஸ்.எஸ்.மணி

இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி பிபின் ராவத் முதன்முறையாக மே 13 ஞாயிறன்று மதியம் இலங்கை சென்றார். அவருடன் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் மேஜர் ஜெனரல் ப்ரீத்தி சிங், பிரிகேடியர் மகேஷ் அகர்வால் ஆகியோர் சென்றனர். கொழும்பில் உள்ள கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இவர்கள் மதியம் சென்று இறங்கினர். மேஜர் அன்ஷுல் அஹலவ, மேஜர் ஜெனரல் அனுரா சுத்தசிங்கே, இந்திய ஹை கமிஷனைச் சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர் அசோக் ராவ் ஆகியோர் வரவேற்றனர்.

இலங்கையில் நான்கு நாள்கள் பயணம் செய்ய இருப்பதாக இந்திய ஊடகங்களும், ஏழு நாள்கள் பயணம் செய்ய இருப்பதாக இலங்கை ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயகே கூறியதாக இலங்கை ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாக இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே நல்ல புரிதலையும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்திக்கொள்வது என்றும், இலங்கை பகுதியில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளவே இந்தப் பயணம் என்றும் இந்திய ஊடகங்கள் எழுதியுள்ளன. இந்திய ராணுவக் குழுவினருக்கு விமான நிலையத்திலேயே, சிவப்புக் கம்பள வரவேற்பும் பாரம்பரிய வெஸ் நடன வரவேற்பும் அளிக்கப்பட்டன. ஒரு நாட்டின் அரசியல் தலைமை வரும்போது செய்யப்படுவதுபோல ஏன் இப்படி வரவேற்பு என ஆச்சர்யப்படலாம். பயணத்தின் அரசியல் முக்கியத்துவம்தான் அதற்குக் காரணம்.

என்ன செய்யப் போகிறது இந்தியா?

திங்கட்கிழமை காலையிலேயே, இந்திய ராணுவக் குழுவினர், "இந்திய அமைதிப் படை வீரர்கள், பயங்கரவாதத்தை எதிர்த்து வடக்கு, கிழக்கு மாகாணங்களான தமிழர் பகுதிகளில் போரிட்ட போது இறந்து போனவர்களின் சமாதிகளுக்குச் சென்று மலர் வளையம் வைத்தனர். இறந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு ராணுவ வணக்கம் செலுத்தினர். இந்திய ராணுவக் குழுவினரை, இலங்கை ராணுவத்தின் துணை தளபதி அஜிது கன்யகாரவன வரவேற்றார். பயணத்தில் இலங்கை அதிபரையும் பாதுகாப்பு அமைச்சரையும் பாதுகாப்புச் செயலாளரையும் மூன்று படைகளின் தளபதிகளையும் சந்திப்பார்கள்; அரசியல் மற்றும் ராணுவத் தலைமைகளைச் சந்திப்பார்கள் என்று கூறப்பட்டது. மகேஷ் சேனநாயக்காவுடன் ராணுவச் சேவை வனிதா குழுவின் சந்திரிகா சேனநாயக்காவையும் சந்திப்பார்கள். இலங்கை ராணுவத்தின் சிக்னல் வீரர்களுக்குப் பயிற்சி கொடுக்க கண்டியில் சிக்னல் பள்ளியில் தொடர்பு சோதனைச் சாலையைத் திறந்துவைப்பார்கள். கிழக்கு மாகாணத்தின் திரிகோணமையில் தியதளவாவில் உள்ள ராணுவ அகாடமிக்கும் தென்னிலங்கையின் காலேயில் உள்ள இலங்கை ராணுவ அகாடமிக்கும் அவர்கள் வருகை புரிவர்.

1987இல் ராஜீவ் காந்தியால் அனுப்பப்பட்ட இந்திய அமைதி காக்கும் படை உலக அரங்கில், குறிப்பாகத் தமிழர்கள் மத்தியில், ‘அமைதி கொன்ற படை’ என்று பெயர் வாங்கியது. ஈழ விடுதலைக்காகப் போராடிவந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரிட்டது. அதில் இறந்துபோன இந்தியப் படை வீரர்களுக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைக்கும் நிகழ்ச்சியையும் இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்தது. அதாவது, முப்பதாண்டுகளுக்கு முன்பு நடந்த சண்டையை, வருகிற இந்திய ராணுவ தலைவர்களுக்கு நினைவுபடுத்தியது தமிழர்களுக்கு எதிராக அவர்களது மனப்பான்மையைச் செதுக்கவா என்ற கேள்வியையும் உலகத் தமிழர்கள் கேட்கிறார்கள்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை நடந்து முடிந்த இனவாதப் போரில் கடுமையான இழப்பைச் சந்தித்திருந்தாலும் சிங்களம் நடத்திய போருக்கு இந்திய அரசு சார்பாக, அன்றைய காங்கிரஸ் அரசு பல்வேறு உதவிகளைச் செய்திருந்தாலும், இன்றைய இந்திய அரசிடம் தங்களுக்கு அரசியல் தீர்வு பெற்றுத் தர வேண்டி நிற்கும் நிலையிலேயே அவர்கள் உள்ளனர். அத்தகைய ஓர் எதிர்பார்ப்பை இந்தப் பயணம் கலைத்து விடுமோ என்ற அச்சமே ஈழத் தமிழர்களிடம் இருக்கிறது.

மாறும் கள நிலவரம்

இந்த நேரத்தில், இலங்கைத் தீவில் நடந்துவரும் அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மஹிந்த ராஜபக்சே தலைமையிலான ஆட்சி, சீன ஆதரவு என்ற நிலையை அப்போது எடுத்திருந்தது. அதனாலேயே அமெரிக்க அரசு, ஐநா மனித உரிமைக் கழகத்தில் மஹிந்தா அரசுக்கு எதிராகப் போர்க் குற்ற விசாரணை என்ற தீர்மானத்தை, மூன்றாண்டுகள் கொண்டுவந்தது. அமெரிக்காவின் ஆதரவு பெற்ற ரணில் விக்ரமசிங்கே என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் மைத்திரி பாலா சிறிசேனா என்ற இலங்கை சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவின் தலைவரும் அமெரிக்கச் சார்பு, மேற்குலகச் சார்பு என்ற நிலையை எடுத்திருந்தனர். ஆனாலும், அவர்களுக்கும் இந்திய அரசின் ஆதரவு தேவைப்பட்டது. அமெரிக்காவும் இலங்கைத் தீவுக்குள் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ள இந்திய அரசின் ஆதரவை வேண்டி நின்றது. ஆட்சி மற்றம் ஏற்பட்டது. மைத்திரிபால சிறிசேனா அதிபராகவும் ரணில் பிரதமராகவும் வந்துவிட்டனர். அதனால் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, ஐநா மனித உரிமைக் கழகத்தில் இலங்கை அரசுக்குச் சார்பாகப் பேச தொடங்கியது.

இந்தச் சூழலில், இலங்கையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், தென்னிலங்கையில் சிங்களர் மத்தியில் மஹிந்த ராஜபக்சே அணியினர் அதிகமாக வெற்றி பெற்றனர். அதனால் அங்குள்ள இலங்கை சுதந்திரக் கட்சியில் சிறிசேனாவுடன் வந்தவர்களில் பலர் மீண்டும் மஹிந்தா பக்கம் சாய தொடங்கினர். பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மஹிந்தா குழுவினர் கொண்டுவந்தனர். அப்போது, அமைச்சரவையில் இருந்த சிறிசேனா ஆதரவாளர்களான அமைச்சர்கள் சிலர் உட்பட, சிங்களர்கள் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தனர். அந்நேரம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஈபிஆர்எல்எஃப் ஆகியவை ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்து ஆட்சியைக் காப்பாற்றினார்கள். எதிர்த்து வாக்களித்த அமைச்சர்கள், ராஜினாமா செய்தனர்.

இப்போது சிறிசேனவுடன் வெளியேறி வந்த இலங்கை சுதந்திரக் கட்சியின் 16 எம்.பிக்கள் மஹிந்தா ஆதரவு நிலைக்குச் சென்றுவிட்டனர். ஆகவே, ரணிலின் ஆட்சி சிக்கலான சூழலைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.

இந்த நேரம் பார்த்து, இலங்கைத் தீவில் செல்வாக்குப் பெற்றிருக்கும், சீன ஆதரவு நிலையை ரணில் எடுத்துவிட்டதாகக் கேள்விப்படுகிறோம். அதாவது அமெரிக்க ஆதரவு, இந்திய ஆதரவு நிலையிலிருந்து பிரதமர் ரணில் சீன ஆதரவு நிலைக்குத் தாவியிருப்பதாக அறிகிறோம். அது உண்மையோ, பொய்யோ தெரியவில்லை. ஆனாலும், மஹிந்த ராஜபக்சே பக்கத்தில் மாற்றம் வந்துள்ளது உண்மையே. அதாவது, மஹிந்தவின் தம்பியான கோத்தபாய ராஜபக்சே வருகிற தேர்தலுக்கு முன்னிறுத்தப்படுவார் என்றும் அவர் இந்திய அரசு ஆதரவைக் கோருகிறார் என்றும் கேள்விப்படுகிறோம்.

அதே சமயம் கோத்தபாய ராஜபக்சேவுக்கும் அவரது இன்னொரு சகோதரர் பசில் ராஜபக்சேவுக்கும் யார் தலைமை எடுப்பது என்ற போட்டி இருக்கவே செய்கிறது. அவர்கள் இருவருமே இந்திய அரசின் ஆதரவை நாடுவதில் வெற்றி பெற்று வருவதாகவும் தெரிகிறது. இலங்கை ராணுவத்தைப் பொறுத்தவரை, அது அரசியல் சார்பான ராணுவம். இன உணர்வின் மூலம் வளர்க்கப்பட்ட ராணுவம். மஹிந்த ராஜபக்சேவாலும், கோத்தபாய ராஜபக்சேவாலும் வளர்க்கப்பட்ட ராணுவம். இன்னமும் இலங்கை ராணுவத்தில் ராஜபக்சே குடும்பத்தினரின் செல்வாக்கே மிகுந்து நிற்கிறது.

இத்தகைய சூழலில், இந்திய ராணுவத்தின் தலைமை அங்கே சென்று இலங்கை ராணுவத்துடன் இணைந்து பயணிக்க எண்ணுவது, தமிழர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இன்னமும் உலகத் தமிழர்கள், ஈழத் தமிழர்களது முன்னேற்றத்துக்கு இந்திய அரசையே முக்கியமாக நம்பி நிற்கின்றனர்.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: டி.எஸ்.எஸ்.மணி தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர். தொடர்புக்கு: [email protected])

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon