மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

தற்கொலைக்கு அனுமதி கேட்கும் திருநங்கை!

தற்கொலைக்கு அனுமதி கேட்கும் திருநங்கை!

தற்கொலை செய்து கொள்வதற்கு அனுமதி கேட்டு கேரள திருச்சூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறார் 51 வயதாகும் தலைக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை ஸிஜி.

கேரளாவில் நர்சிங் படிப்பை முடித்துவிட்டு சவுதி அரேபியாவில் செவிலியராக ஸிஜி பல ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். விசாவை புதுப்பிக்காததால் சவுதி அரசு ஸிஜியை நாட்டை விட்டு வெளியேற்றியது.

இந்தியா திரும்பிய ஸிஜி கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் செவிலியர் பணி தேடி அலைந்தார். ஸிஜி திருநங்கை என்பதால் எந்த மருத்துவமனை நிர்வாகமும் பணி தர மறுத்துவிட்டன. வேலை இல்லாத காரணத்தால் குடும்ப உறுப்பினர்களும் ஸிஜியை வெறுக்கத் தொடங்கினர். இதனால் மனமுடைந்த ஸிஜி திரிச்சூர் மாவட்ட ஆட்சியரிடம் தற்கொலை செய்து கொள்வதற்கு அனுமதி வேண்டிய மனுவை வழங்கினார்.

மனுவைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் திருநங்கை ஸிஜியைச் சமாதானப்படுத்தி, பணி வாய்ப்புக்கு உதவுவதாகவும் உறுதியளித்தார். வாக்குறுதியை ஏற்ற ஸிஜி அமைதியாகத் திரும்பினார்.

சமூகச் சூழல்கள் மாறிவரும் இந்தக் காலத்தில் பாலினச் சிறுபான்மையினர் மீதான பொது சமூகத்தின் பார்வை மாறாமல் இருப்பது கவலையளிக்கிறது, மேலும் மாற்றுப்பாலினத்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு போன்றவற்றைச் செய்து தர வேண்டும் என்பதே சமூக அக்கறை கொண்டோரின் எண்ணமாக இருக்கிறது.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon