தனது நீண்ட நாள் கனவு நிறைவேறி இருப்பதாக நடிகை மியா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் துணை நடிகையாகத் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய மியா ஜார்ஜ், 2012ஆம் ஆண்டின் சிறந்த கேரள அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதே ஆண்டில் செட்டயீசு என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாகக் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் ஜீவா சங்கர் இயக்கத்தில் அமரகாவியம் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்துவிட்டார். பெரும்பாலும் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும் நடிகைகள் மலையாளத் திரையுலகை மறந்து விடுவது வழக்கம். ஆனால், மியா ஜார்ஜ் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலுமே கவனம் செலுத்தி வருகிறார்.
தனது தாயுடன் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் சென்றுள்ள மியா ஜார்ஜ், அங்கு ஸ்கை டைவிங் செய்திருக்கிறார். அதைத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு, “ஸ்கை டைவிங் செய்வதற்கு நீண்ட நாள்கள் காத்திருந்தேன். இந்த அனுபவத்தைச் சொன்னால் புரியாது. நீங்கள் ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டும். என்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டது. நானும் என் அம்மாவும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.