மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

சிறப்புக் கட்டுரை: எழுத்தின் சக்திப் பிரவாகம்!

சிறப்புக் கட்டுரை: எழுத்தின் சக்திப் பிரவாகம்!

வீரா

கவிதா முரளிதரனின் ‘கூண்டுப் பறவையின் தனித்த பாடல்’ தொகுப்பு குறித்த பார்வை

‘கூண்டுப் பறவையின் தனித்த பாடல்’ கட்டுரைத் தொகுப்பின் மூலம் இதன் ஆசிரியர் கவிதா முரளிதரன் சமூகம், பெண்ணியம், சினிமா மற்றும் இலக்கியம் என்ற வகைமைகளுக்குள் நின்று வாசகர்களுடன் ஒரு தோழமையான உரையாடலை நிகழ்த்துகிறார். இந்த உரையாடல் முழுவதும் கவலைகளும் எச்சரிக்கைகளும் நிறைந்தவை. பெண்ணினம் உள்ளிட்ட மொத்த மனித இன விடுதலை குறித்துப் பேசும் இந்தக் கட்டுரைகள் அதன் உள்ளடக்கத்தில் வெளிப்படுத்தும் ஆழ்ந்த கவலைகளின் காரணமாக ஒரு பொறுப்புள்ள பிரதியாக மாறுகிறது.

“பொருட்படுத்த வேண்டிய விடயங்களைப் பற்றி நாம் எப்போது மௌனம் காக்கத் தொடங்குகிறோமோ அன்று நமது வாழ்வு முடியத் தொடங்குகிறது” என்ற மார்ட்டின் லூதர் கிங்கின் வார்த்தைகளை முன்வைத்து இந்தத் தொகுப்பில் தன் உரையாடலை நிகழ்த்தும் கவிதா, நம் அனைவராலும் பொருட்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் பலவற்றை உணர்த்திச் செல்கிறார்.

இந்திய ஒன்றியத்தின் அரசியல் சிக்கல்களில் முக்கியமானதும் நேர்மையான தமிழ் மனதின் உணர்வுத் தளத்தில் ஆழ்ந்த சலனங்களை ஏற்படுத்த வல்லதுமான இலங்கைத் தமிழர்களின் அரசியல் குறித்து சிந்திக்கவோ, உரையாடவோ தவறினால் நாம் இந்தச் சமூகத்திலிருந்து பொறுப்பற்ற முறையில் விலகி இருக்கிறோம் என்றே பொருள்.

உலக அரசியல் போக்கின் தவிர்க்க இயலா விளைவுகளில் ஒன்றான இலங்கை அரசியலின் திருப்பங்களாலும், இனவெறிக்கும் இனஉரிமைக்கும் இடையிலான ஆயுதப் போரின் கடும் பாதிப்புகளாலும் சிக்கித் தவித்த எளிய மனிதர்களின் வாழ்க்கை குறித்து கவிதா கவலையுடன் உரையாடுகிறார். ‘வாழ்வுடனான போராட்டத்தில் மரணம் என்பது ஒரே ஒரு தோல்விதான். ஆனால், மரணம் தவிர்த்த வேறு வழிகளில் வாழ்க்கை அவர்களை மீண்டும் மீண்டும் தோற்கடித்துக் கொண்டேயிருக்கிறது’ என்ற அயர்ச்சி மிகு வரிகளின் மூலம் இலங்கையில் மரணத்தை விடப் பிழைத்திருப்பதே பெரும் துயராக மாறியிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

பணம் இல்லாத ஒரே காரணத்தால் நாட்டைவிட்டு வெளியேற முடியாமல் சாவின் நுனியில் வாழும் இளைஞர்களைப் பற்றி அவர் எழுதிய ஒரு வரிக்கு எதிர்ப்புறமாக இதுவரையான இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் எழுச்சி மிகு விடுதலைப் போராட்டமும் அதற்காக நடந்த எண்ணற்ற தியாகங்களும் நிறுத்தப்படுகின்றன. சிங்களக் கொடியைத் தங்கள் வீட்டில் பறக்கவிட வேண்டிய நிர்பந்தம் கொண்ட தமிழ்க் குடும்பம் முதல் பேரறிவாளன் மற்றும் அவர் தாயார் அற்புதம் அம்மாள் ஆகியோரின் வாழ்நிலை வரை தன் பதிவுகளின் வழியே இலங்கையின் உள்நாட்டுப் போர் ஏற்படுத்திய பெரும் துயரத்தை நமக்கு உணர்த்திச் செல்கிறார்.

பேரறிவாளனின் வழக்கில் தொடர்புடைய விசாரணை அதிகாரி ராகோத்தமன், அவருக்குத் தூக்கு தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பு எழுதிய உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி. தாமஸ், அவருடைய வாக்குமூலத்தைப் பதிவுசெய்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி தியாகராஜன் ஆகியோரின் தனிப்பட்ட கருத்துகள் காலம் கடந்து வெளிப்பட்டிருந்தாலும் பேரறிவாளனின் விடுதலையில் ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தியிருப்பதைக் கவனப்படுத்துகிறார். ஒரு பத்திரிகையாளராக இலங்கையின் ஊடகச் சுதந்திரம் குறித்த கவலைகளும் அவரின் எழுத்துகளின் வழியே வெளிப்படுகின்றன.

”அகிம்சைதான் நமது வழிமுறை என்றால் எதிர்காலம் பெண்களிடம்தான் இருக்கிறது. ஒரு பெண்ணைத் தவிர வேறு யாரால் இதயத்தைத் தொடும் ஒரு வலுவான கோரிக்கையை முன்வைக்க முடியும்” என்ற காந்தியின் வரிகள் சில ஆண்டு இடைவெளியில் வெளியான இரண்டு கட்டுரைகளில் பதிவாகின்றன. காரணம், அந்த வரிகள் தொடர்ந்து அவருக்குள் ஒலித்துக்கொண்டேயிருப்பதன் வெளிப்பாடுதான் அது.

பெண்ணியம் பற்றிய உரையாடல்

இந்தத் தொகுப்பின் அதிகக் கட்டுரைகள் பெண்ணியம் பற்றிய உரையாடலாக அமைகின்றன. பெண்ணிய உணர்வுகள் அவளுடைய வாசிப்பின் வழியாகவும் அவள் மீதான அடக்குமுறையிலிருந்தும் பிறக்கின்றன என்ற புரிதலை பாகிஸ்தானைச் சேர்ந்த முக்தார் மாய் என்ற ஓர் அபலைப் பெண்ணின் வாழ்வியல் போராட்டங்கள் வழியாக முன்வைக்கும் கவிதா, அந்தப் பெண்ணின் மீதான சில விமர்சனங்களை அவரின் சமூகப் பின்புலத்திலிருந்து அணுகி அவருக்குக்கான கருணையை வெளிப்படுத்துகிறார்.

ஒரு கட்டுரை கழிப்பறை வசதி குறித்து விவாதிக்கிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் சரி பாதியினர் கழிப்பறை வசதியில்லாதவர்கள் என்றும் அதில் ஐம்பது சதவிகிதத்தினர் பெண்கள் என்றும் ஆய்வுகள் ஒப்புவதைப் பதிவுசெய்யும் கவிதா, கழிப்பறைப் பிரச்சினை என்பது பெண் மீதான வன்முறைக்கு அடித்தளமிடுவதையும் சாதியப் படிநிலையில் அது ஆற்றிடும் பங்கு குறித்தும் கோபத்துடன் தன் கருத்துகளை முன்வைக்கிறார்.

மற்றொரு கட்டுரை, இந்திய அரசியலில் பெண்களின் பங்களிப்பைப் பற்றிப் பேசுகிறது. தற்போதைய இந்திய அரசியலில் பெண்களின் பங்களிப்புகள் அவ்வளவு நிறைவாக இல்லை என்பதை நிறுவும் இந்தக் கட்டுரை, பாலினச் சமத்துவம் அற்ற இந்தியாவை வளர்ந்த நாடுகளின் வரிசையில் சேர்க்க முனையும் அரசியல் கட்சிகளைக் கடுமையாகச் சாடுகிறது.

‘இந்திய தாலிபான்கள்’ என்ற கட்டுரை வடஇந்தியாவின் காப் பஞ்சாயத்துகளை அலசுகிறது. நம் மாநிலத்தின் சாதிய மேலாண்மைக் கட்டப் பஞ்சாயத்துகளுடன் ஒப்பிடப்படும் இந்தப் பஞ்சாயத்துகள் சமூக அச்சத்தை மேலிட வைப்பவை. அவற்றின் அதிகாரக் குவிப்பும் அதை நியாயப்படுத்தும் அரசியல் பார்வைகளும் மிகுந்த பதற்றத்துடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வகைப் பஞ்சாயத்துகள் தங்கள் நீதி பரிபாலனையில் பெண்களையே பெரும்பாலும் பொறுப்பாக்கும் தீமையைச் சுட்டிக்காட்டப்பட்டு, இவற்றுக்கெல்லாம் தீர்வாக அரசியல் உறுதிமிக்க தலைமை முன்மொழியப்படுகிறது.

பெண்சிசுக் கொலை என்னும் களங்கம்

இந்தத் தொகுப்பின் மிக முக்கியமான கட்டுரை என்றால் அது பெண் கருக்கலைப்பு பற்றியதுதான். வறுமையாலும் அறியாமையாலும் உருவெடுத்த சமூகக் களங்கம் ஒன்று உண்டென்றால் அது கொடுமையான பெண்சிசுக் கொலையே. மிகுந்த வேதனையுடன் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை இந்தப் பூவுலகில் பெண்களின் பங்களிப்பை உணர்ந்த யாரையும் மனம் கலங்க வைக்கும் தன்மை கொண்டது.

கூடங்குளப் போராட்டத்தில் தங்கள் குழந்தைகளை ஈடுபடுத்திய பெண்களின் நியாயங்களைப் பேசும் ஒரு கட்டுரை, ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து மேலெழுந்து வந்த பெண்ணிடமிருந்து (இந்திரா) வெளிப்படும் நம்பிக்கை பற்றிய ஒரு கட்டுரை. சூழலியலைப் பேணுவதில் பெண்களின் பங்களிப்பைப் பற்றிய ஒரு கட்டுரை என்று பெண்ணினத்தின் பெருமைமிகு வேர்கள் பரவியுள்ள இடங்களையெல்லாம் தேடிச் சென்று கடமையுணர்வோடு நீர் சொரியும் பணியைச் செய்கிறார்.

படைப்பு குறித்த பதிவுகள்

இலக்கியம் சார்ந்த கட்டுரைகளில் கவிஞர் மாயா ஏஞ்சலோ பற்றிய குறிப்புகளை எழுதுகிறார். தன் எண்பத்தியாறாவது வயதில் இறந்த அந்த அமெரிக்கக் கறுப்பினப் பெண் கவிஞரின் துயர்மிகு முற்பகுதி வாழ்வைத் தொட்டுக்காட்டி, வாழ்வின் பிற்பகுதியில் தன் சுதந்திர உணர்வை மீட்டெடுத்த ஏஞ்சலோவின் கவிதை வரிகளை இந்தத் தொகுப்பின் தலைப்பாக்கி அவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

எழுத்தாளர் சந்திராவின் ‘அழகம்மா’ சிறுகதைத் தொகுதி பற்றிய மதிப்புரையில் ஒவ்வொரு கதைகளுக்கும் குறிப்பெழுதிக் கொண்டேவரும் கவிதா வறண்ட நிலப் பிரதேசங்களில் சந்திரா தூவிச் செல்லும் வாதையின் விதைகள்மீது மட்டும் மினுங்க மினுங்கப் பெய்கிறது மழை என்ற அற்புதமான கவித்துவ வரிகளின் மூலம் அந்த மொத்தச் சிறுகதைத் தொகுப்பின் மீதும் ஓர் ஆர்வத்தைக் குவியவைக்கிறார்.

இந்தத் தொகுப்பின் நிறைவுப் பகுதியில் யுவன் சந்திரசேகரின் மொழிபெயர்ப்பு குறித்து எழுதும் போது கவிதாவின் எழுத்து, தரையில் நெளிந்து நடந்த முதலை தண்ணீரில் வழுக்கி இறங்கியதைப் போல் அசாத்திய சக்திப் பிரவாகம் கொள்கிறது. இரு மொழி அறிவால் விளைந்த பார்வைப் பரவலாலும் கவிதையில் தனக்கிருக்கும் ஆளுமைத் திறனாலும் யுவனின் மொழிபெயர்ப்பை மிகுந்த நுட்பத்துடன் அலசுகிறார். மொழிபெயர்ப்பைப் ப்ரியத்தின் வெளிப்பாடாகவும் ஆன்ம ஒத்திசைவாகவும் முன்வைக்கும் கவிதாவின் ஜென் கவிதைகள் பற்றிய சிலாகிப்பில் யுவனின் மொழிபெயர்ப்பு அதன் நோக்கத்தை நிறைவு செய்துகொள்கிறது.

தொகுப்பின் நிறைவுப் பகுதியில் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட ஆப்கான் பெண்களின் பீறிட்டு வெளியேறிய எழுச்சியை லாண்டாய் என்னும் வாய்மொழிப் பாடல்களாக அவர்கள் வரலாற்றுக்குக் கையளிப்பதையும் ஆப்கான் சமூகத்தில் அவ்வகைக் கவிதைகள் எதிர்ப்பியக்க அரசியல் செயல்பாடுகள் என்பதையும் குறிப்பிடுட்டு, நம் வாழும் சமூகத்திலும் லாண்டாய்கள் எழுதப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி இந்தத் தொகுப்பை நிறைவு செய்கிறார்.

முழுத் தொகுப்பிலும் வாசக மனதுக்கு நெருக்கமான மொழியைக் கைகொண்டு பொறுப்புமிக்க பத்திரிகையாளராக, பெண்ணியவாதியாக, கலைஞராக வெளிப்படும் கவிதா முரளிதரன் தன்னுடைய உரையாடல்கள் மூலம் நம்மையும் சமூகப் பொறுப்புக்கு உள்ளாக்கியிருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றிகளையும் வாழ்த்துகளையும் அவசியம் சொல்ல வேண்டும்.

(கூண்டுப் பறவையின் தனித்த பாடல் - நூலாசிரியர்: கவிதா முரளிதரன், வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ், விலை: ரூ.70.)

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon