மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

மகிழ்ச்சியில் கோதுமை விவசாயிகள்!

மகிழ்ச்சியில் கோதுமை விவசாயிகள்!

கோதுமை விவசாயிகள் மகிழ்ச்சியுறும் செய்தியாக, நடப்பு சந்தை ஆண்டில் கோதுமை கொள்முதல் 16 விழுக்காடு அதிகரித்து 31.87 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. அரசின் இலக்கான 32 மில்லியன் டன்னும் விரைவில் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசின் அதிகாரபூர்வ தகவல்களின்படி, 2017-18 சந்தை ஆண்டில் (ஏப்ரல் - மார்ச்) இந்திய உணவுக் கழகமும், மாநிலக் கொள்முதல் ஏஜென்சிகளும் 27.57 மில்லியன் டன் அளவிலான கோதுமையைக் கொள்முதல் செய்துள்ளன. 2017-18ஆம் ஆண்டில் கொள்முதல் செய்யப்பட்ட மொத்த கோதுமையின் அளவு 30.82 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. உற்பத்தி சிறப்பாக இருந்ததால் அரசு தனது கொள்முதல் இலக்கை அதிகரித்து 32 மில்லியன் டன்னாக நிர்ணயித்தது.

இதுகுறித்து இந்திய உணவுக் கழகத்தின் உயரதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “இந்த ஆண்டில் நிறைய கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டதால் கோதுமை கொள்முதல் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, ஏராளமான விவசாயிகள் தங்களது உற்பத்தியை விற்பனை செய்ய கொள்முதல் நிலையங்களை நாடி வருகின்றனர்” என்று கூறினார். இந்த ஆண்டில் கோதுமை கொள்முதலுக்காக 18,326 கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசின் தகவல்களின்படி, 2018-19ஆம் ஆண்டில் இதுவரை பஞ்சாப் மாநிலத்தில் 12.48 மில்லியன் டன் அளவிலான கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் 8.71 மில்லியன் டன்னும், உத்தரப் பிரதேசத்தில் 3.03 மில்லியன் டன்னும், மத்தியப் பிரதேசத்தில் 6.24 மில்லியன் டன்னும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஹரியானாவில் கோதுமை கொள்முதல் முற்றிலுமாக நிறைவடைந்துவிட்டதாகவும், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இம்மாத இறுதியுடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், உத்தரப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் ஜூன் 15ஆம் தேதி வரை கோதுமை கொள்முதல் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon