மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

கண்ணீர் விட்ட சித்தராமையா

கண்ணீர் விட்ட சித்தராமையா

காங்கிரஸ் கட்சி கர்நாடக தேர்தலில் தோல்வி அடைந்ததை ஒட்டி நேற்று நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா கண்ணீர் வடித்துள்ளார்.

கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் மே 15 ஆம் தேதி வெளியான நிலையில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் 78 தொகுதிகளில் மட்டுமே ஜெயித்து பாஜகவை அடுத்த இரண்டாவது கட்சியாக வந்தது.

இந்நிலையில், நேற்று பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சியின் புதிய சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் 73 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ.வும் கலந்துகொண்டனர். மீதியுள்ளவர்கள் தலைமையிடம் போனில் பேசி உடனடியாக வரமுடியாததைத் தெரிவித்ததாக தகவல்கள் வருகின்றன.

கூட்டத்தில் பேசிய பல சீனியர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சியின் தோல்விக்கு சித்தராமையாவே காரணம் என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டிப் பேசினார்கள்.

“ஆளுங்கட்சியாக இருந்த நாம் இன்று இந்த நிலைமைக்கு வந்திருக்கிறோம் என்றால் அதற்கு முதல் காரணம் சித்தராமையாதான். அவரது அணுகுமுறைகள் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு ரொம்பவே மாறிவிட்டன. லிங்காயத்து விஷயத்தில் அவசரப்படவேண்டாம் என்று சொல்லியும் தனி மதமாக அறிவித்தார். ஆனால் தேர்தலுக்காக நாம் போட்ட ஸ்டண்ட் என்பதை லிங்காயத்து மக்களே புரிந்து நம்மை நிராகரித்துவிட்டார்கள்’’ என்றார் ஒரு சீனியர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.

இன்னொரு தலித் எம்.எல்.ஏ. பேசும்போது, “இந்த ஆட்சியின் ஆரம்பத்திலேயே ஒரு தலித்தை துணை முதல்வர் ஆக்குங்கள் என்று கெஞ்சிக் கேட்டோம், வலியுறுத்தினோம். ஆனால் சித்தராமையா அதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அப்படி செய்திருந்தால் தலித் ஓட்டுகளை பாஜக அபகரித்திருக்காது’’ என்று கோபித்துக் கொண்டார்.

“தேர்தல் சீட் ஒதுக்குவதில் சித்தராமையா எதேச்சதிகாரத்தோடு நடந்துகொண்டார், தான் இரு தொகுதி, தன் மகன் ஒரு தொகுதி என்று இஷ்டத்துக்கு வேட்பாளர்களை தேர்வு செய்தார். அதனால்தான் இந்த இழப்பு’’ என்றும் பலர் குற்றம் சாட்டினர்.

இதற்கெல்லாம் பிறகு பேச வந்த சித்தராமையா பேசுவதற்கு முன் கொஞ்ச நேரம் கண் கலங்கி அழுதுவிட்டார்.

‘’நீங்கள் எல்லாம் என் மீது குற்றம் சாட்டுகிறீர்கள். 69 வயதிலும் தேர்தல் பிரசாரத்தில் நான் எப்படி உழைத்தேன் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். கடந்த ஐந்து ஆண்டுகாலமாக நாம் நல்லாட்சிதான் கொடுத்தோம். ஆனால் அதைப் பற்றி பாஜகவினர் தவறான தகவல்களை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததோடு இல்லாமல்... மக்களை பிளவுபடுத்தி இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். நாம் அடைந்தது கௌரவ தோல்விதான். படுதோல்வி அல்ல. ஆட்சிக்கு எதிரான எந்த அலையும் வீசவில்லை. ஆனாலும் தோல்விக்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்’’ என்று பேசிவிட்டு அமர்ந்திருக்கிறார் சித்தராமையா.

வியாழன், 17 மே 2018

அடுத்ததுchevronRight icon