மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

காலா: வதந்திகளை நம்ப வேண்டாம்!

காலா: வதந்திகளை நம்ப வேண்டாம்!

‘காலா’ படம் வெளியாவது உறுதி என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பா.ரஞ்சித்-ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’. நானா படேகர், சமுத்திரக்கனி, ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், அருள்தாஸ், மணிகண்டன், அஞ்சலி பாட்டீல், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.முரளி ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் 9 பாடல்களும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் காரணமாக ஜூன் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் ‘ஜுராஸிக் பார்க்’ படத்தின் அடுத்த பாகமான ‘ஜுராஸிக் வேர்ல்டு: ஃபாலன் கிங்டம்’ ஜூன் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாவதாகவும், இந்தியாவிலும் நிறைய திரையரங்குகளில் வெளியாவதால் ‘காலா’ படத்துக்குப் போதுமான திரையரங்குகள் கிடைக்காததால் வெளியீடு தள்ளிப்போகிறது என்றும் தகவல் பரவியது.

இதை வுண்டர்பார் நிறுவனம் மறுத்துள்ளது. இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில், “எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம். திட்டமிட்டபடி ஜூன் 7ஆம் தேதி படம் வெளியாகும். விரைவில் படம் குறித்தான உற்சாகமான செய்திகள் வெளிவரவிருக்கின்றன. காத்திருங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலா திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நாளில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon