மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

டிஜிட்டல் திண்ணை: அதிமுகவில் இணைகிறார் திவாகரன்

டிஜிட்டல் திண்ணை: அதிமுகவில் இணைகிறார் திவாகரன்

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

“நேற்று திவாகரன் மகன் ஜெய் ஆனந்த்க்கு 25 வது பிறந்தநாள். தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஜெய் ஆனந்த் பெயருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ‘ஜூனியர் பாஸ்’ என எழுதப்பட்ட மெகா சைஸ் கேக்கை வெட்டினார் ஜெய் ஆனந்த். பிறந்தநாள் விழாவுக்கு வந்திருந்தவர்களிடம், ‘ 23 ஆம் தேதி வரைக்கும் எல்லோருமே அமைதியா இருங்க. அதுக்குப் பிறகு எல்லாமே அதிர்வேட்டுதான்! இனிப்பு கொடுத்து கொண்டாடும் செய்திகள் உங்களுக்காக காத்திருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார். வந்திருந்தவர்களுக்கு அது என்னவென்று புரியவில்லை. ‘என்ன தம்பி 23-ம் தேதி?” என பலரும் கேட்டார்களாம். ‘23-ம் தேதி இனிப்பு கொடுத்து அது என்னண்ணு உங்களுக்கு சொல்றேன்!” என்று சொன்னாராம் ஜெய் ஆனந்த்.

என்ன திட்டம் வைத்திருக்கிறார் திவாகரன் என்று மன்னார்குடி வட்டாரத்தில் விசாரித்தோம். “திவாகரனை பொறுத்தவரை அம்மா அணி என்று தொடங்கினாலும், அதை அதிமுகவுடன் இணைத்துவிட வேண்டும் என்பதுதான் அவரது திட்டம். தனிக் கட்சி தொடங்கி நடத்துவது எல்லாம் முடியாத காரியம் என்பது அவருக்கும் தெரியும். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெய் ஆனந்த் சென்னை வந்திருந்தார். அப்போது ஈக்காட்டுதாங்கல் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் ஜெய் ஆனந்த்தை சந்தித்தார் அதிமுகவில் உள்ள அமைச்சர் ஒருவர். கிட்டதட்ட இரவு 12 மணி வரை இருவரும் பேசியிருக்கிறார்கள்.

‘கட்சி தொடங்க வேண்டும் என்பதெல்லாம் எங்களுக்கு நோக்கம் இல்லை. தினகரன்கிட்ட இருந்து நேரடியாக அதிமுகவில் சேர்ந்தால், ஏதோ எடப்பாடி சொல்லி நாங்க செஞ்ச மாதிரி ஆகிடும். நாங்க உங்களுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கோம். அப்பாவுக்கும் , எனக்கும் கட்சியில் எதாவது பொறுப்பு கொடுக்கணும். அதுக்கு நீங்கதான் பேசணும்...’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார் ஜெய் ஆனந்த். வந்திருந்த அமைச்சரும் எடப்பாடியுடன் பேசுவதாக சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். ஆனால் எடப்பாடியிடம் இந்த விஷயத்தை சொன்னபோது, ‘அந்தக் குடும்பமே வேண்டாம் என்றுதானே நாம ஒதுக்கி வெச்சிருக்கோம். மறுபடியும் அவங்களை உள்ளே கொண்டு வந்தால், கடைசியில் நம்மையே அதிகாரம் பண்ண ஆரம்பிச்சிருவாங்க...’ என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு ஜெய் ஆனந்த்தை சந்தித்த அமைச்சரோ, ‘சசிகலாவுக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதை அவங்களே தெளிவாக சொல்லிட்டாங்க. அதனால்தான் அவங்களை சேர்த்துக்கலாம்னு சொல்றேன்...’ என்று சொன்னாராம். எடப்பாடியோ, ‘சரி யோசிச்சு எல்லோரும் பேசி முடிவு பண்ணுவோம்...’ என்று பட்டும் படாமல் சொல்லியிருக்கிறார்.

இதற்கிடையில், திவாகரன் தரப்பில் தஞ்சாவூரில் உள்ள ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் பார்த்திருக்கிறார்கள். ’23-ம் தேதி நாள் நல்லா இருக்கு. அன்று நீங்க அதிமுகவில் இணைந்தால் சரியாக இருக்கும்..’என்று சொன்னாராம். அதன்படி 23-ம் தேதி எப்படியாவது அதிமுகவில் இணைந்துவிட வேண்டும் என்பதுதான் திவாகரன் திட்டம். அதற்கான காய் நகர்த்தலில்தான் ஈடுபட்டு வருகிறது திவாகரன் குடும்பம். நேற்று ஜெய் ஆனந்த் பிறந்தநாள் விழாவில், ‘எதுக்காகவும் எடப்பாடியையோ, பன்னீரையோ யாரும் திட்ட வேண்டாம். நம்ம டார்கெட் தினகரன் மட்டும்தான்!” என்று திவாகரனே அவரது ஆதரவாளர்களுக்கு அட்வைஸ் செய்து அனுப்பியிருக்கிறார். இதையெல்லாம் வெச்சுப் பார்த்தால், எப்படியும் விரைவில் அவர்கள் சொல்லி வரும் 23-ம் தேதி அம்மா அணியை அதிமுகவுடன் இணைத்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது...’என்று சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.” என்று முடிந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்துவிட்டு, காத்திருந்தது வாட்ஸ் அப்.

அந்த மெசேஜ்ஜை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது.

“பிஜேபியை தொடர்ந்து எதிர்த்து வரும் தினகரன் இப்போது கொஞ்சம் அடக்கியே வாசிக்க ஆரம்பித்து இருக்கிறார். பிரதமர் சென்னைக்கு வந்த போது அவருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டத்தில் தினகரன் கட்சியில் யாரும் ஈடுபடவில்லை. சில வாரங்களுக்கு முன்பு தினகரனை சந்தித்துப் பேசியிருக்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி. அதன் பிறகுதான் தினகரன் அடக்கி வாசிப்பதாக சொல்கிறார்கள். குருமூர்த்தி- தினகரன் சந்திப்பின் போது, டெல்லியில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவரும் தொலைபேசி வழியாக தினகரனிடம் பேசினாராம். அதன் பிறகுதான் தினகரன் அடக்கி வாசிக்கிறார் என்பது விவரமறிந்தவர்கள் சொல்லும் தகவல்!” என்ற ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்துவிட்டு சைன் அவுட் ஆனது .

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon