மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

மீனாட்சி அம்மன் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு!

மீனாட்சி அம்மன் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.4 ஆயிரம் கோடி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் ராதாகிருஷ்ணன் இன்று (மே 17) கூறியுள்ளார்.

இதுகுறித்து ராதாகிருஷ்ணன், “மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஏராளமானோர் நிலங்களைத் தானமாக வழங்கியுள்ளனர். அதுபோன்று மதுரை எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் எதிரே சுமார் 50 ஏக்கர் நிலம் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சுப்பையா என்பவரால் தானமாக வழங்கப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி ஆகும்.

கோயில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் இந்த நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இன்றைய ஆய்வின்போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் மீனாட்சி அம்மன் கோயில்களில் உள்ள சாமிகளுக்கு பூஜை செய்வதற்காக வழங்கப்பட்ட நிலங்களையும் முறைகேடாக விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. அதுபோன்று தமிழகம் முழுவதும் கோயில் நிலங்களை சில அரசியல்வாதிகளும், ரவுடிகளும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இவ்வாறு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் நிலங்களைக் கண்டறிந்து அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆய்வுப் பணி இன்று தொடங்கியது. அடுத்த கட்டமாகத் திருப்பரங்குன்றம், பிள்ளையார்பட்டி என அனைத்துக் கோயில்களிலும் ஆய்வு நடைபெறவுள்ளது.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு புகார் கொடுக்கும் நபரின் விவரம் ரகசியம் காக்கப்படும். [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம்” என்று கூறியுள்ளார்.

தமிழக கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதும், சிலைகளில் முறைகேடு செய்வதும் தொடர்கதையாகிவருகின்றது.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon