மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

யாருக்கும் அஞ்ச மாட்டோம்: விஷால்

யாருக்கும் அஞ்ச மாட்டோம்: விஷால்

இரும்புத்திரை படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவிற்கு பதில் கூறும் விதமாக ‘யாருக்கும் அஞ்ச மாட்டோம்’ எனக் கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம் இரும்புத்திரை. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை விமர்சிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு, பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த போதும், மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் படம் நன்றாக வசூலிப்பதால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். படத்தின் வெற்றி விழா சென்னையில் இன்று (மே 17) நடைபெற்றது. நடிகர் விஷால், இயக்குநர் மித்ரன், வில்லன் பாத்திரத்தில் நடித்த அர்ஜுன் மற்றும் காளி வெங்கட், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய விஷால் தனக்கு இத்திரைப்படம் எப்படி அமைந்தது என்ற அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதோடு, இந்தப் படம் வெளிவருவதற்கு முன் ஏற்பட்ட இன்னல்கள் பற்றியும் பேசினார்.

“டிஜிட்டல் இந்தியா பற்றி சொல்வதற்கான தளம் கிடைத்தது சொல்லி இருக்கிறோம். படத்திற்கு எதிராக போராட்டம் செய்பவர்கள் வள்ளுவர் கோட்டத்தில் அனுமதி வாங்கி போராடுங்கள். இல்லையெனில் சென்சார் போர்டு ஆபிஸுக்கு முன்பு போராட்டம் செய்யுங்கள். சினிமா தியேட்டர் நீங்கள் போராடுவதற்கான இடம் அல்ல. ஒருமுறை சென்சார் சான்றிதழ் வாங்கிவிட்டால் அந்தப் படம் மக்களைச் சென்று சேர்வதை யாரும் தடுக்க முடியாது. ஏன் என்றால் இது சினிமா, சினிமாவில் காட்டக்கூடிய விஷயங்கள் கற்பனைகள், நிஜம் கலந்தவையாகவே இருக்கும்.

நீங்க என்னதான் நிறுத்தினாலும், ஆதார் கார்டு சம்மந்தப்பட்ட விஷயமாகட்டும், டிஜிட்டல் இந்தியா சம்மந்தப்பட்டதாக இருக்கட்டும், இல்லை சமுதாயத்தில் லோன் சம்மந்தமான விஷயங்களோ எல்லாம் இன்று அனைவரும் அறிந்த விஷயமாக இருக்கிறது. ஒரு விவசாயிக்கு லோன் கிடையாது. மிலிட்டரிகாரனுக்கு பாஸ்போர்ட் கிடையாது. இது போன்ற விவரங்களையெல்லாம் மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில், எங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. அதை நாங்கள் பூர்த்தி செய்வோம். யாருக்காகவும் அஞ்ச மாட்டோம்” என்று இரும்புத்திரை படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவிற்கு பதில் கூறும் விதமாகப் பேசினார்.

படத்திற்கு ஏற்பட்ட தடைகளைப் பற்றி பேசியவர், “மே 10ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. எனக்கு பணத்தோட அருமையைப் புரிய வைத்தார்கள். இந்தப் படம் ரிலீஸ் ஆகக் கூடாது என பல வேலைகள் செய்தார்கள்” என்று கூறிய பின்பு சொடக்கு போட்டு பேச ஆரம்பித்த விஷால், “தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் என்றுமே நேர்மையா இருக்கும். எல்லா தயாரிப்பாளரும் ஜெயிக்க வைக்கிறது தான் எங்க வேலை. நான் பார்த்த அந்த 10 மணிநேரம் என் வாழ்க்கையைப் புரட்டி போட்டிருக்கிறது. பணத்தோட அருமை என்னவென்று எனக்குப் புரியவைத்தார்கள். அன்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு எனக்கு உதவவில்லை என்றால் இந்த இரும்பு திரைத் திரைப்படம் வெளியாகி இருக்காது. அதற்காக என்றும் நான் அவருக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன்” என்றார்.

நிகழ்வு முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த விஷால், கர்நாடகத் தேர்தல் பற்றிய கேள்விக்கு “மின்னணு வாக்குப்பதிவை விட, வாக்குச்சீட்டு முறைதான் சிறந்தது என்று கூறியதோடு, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ரூ.7 கோடி முறைகேடு நடந்துள்ளதா என்பதைப் பொருளாளரிடம் கணக்குகளை கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்” எனவும் தெரிவித்துள்ளார்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon