மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

காலையில் எடியூரப்பா: மாலையில் குமாரசாமி

காலையில் எடியூரப்பா: மாலையில் குமாரசாமி

கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோரி இன்று காலை 12 மணிக்குக் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்தார் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா. அதனைத் தொடர்ந்து மாலையில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்க மஜத தலைவர் குமாரசாமி உரிமை கோரியுள்ளார் .

ஆளுநரைச் சந்திக்கச் சரியாக மாலை 5 மணிக்கு ராஜ்பவன் சென்றார் குமாரசாமி. அவருடன் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா, மூத்த தலைவர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோரும் சென்றனர். 117 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட ஆதரவுக் கடிதத்தை ஆளுநரிடம் அளித்த குமாரசாமி ஆட்சியமைக்க உரிமையும் கோரினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தச் குமாரசாமி, "மற்ற மாநிலங்களைப் போல கர்நாடகாவில் ஆட்சியமைப்பதில் முறைகேடு நடந்துவிடக் கூடாது. மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. எனக்கு ஆதரவு தரும் 117 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட ஆதரவுக் கடிதத்தை ஆளுநரிடம் அளித்துள்ளோம். அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் " என்று தெரிவித்துள்ளார்.

"சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து முடிவு எடுப்பேன் என்றும், கண்டிப்பாகச் சரியான முடிவினை எடுப்பதாகவும் ஆளுநர் எங்களிடம் உறுதியளித்துள்ளார்" என்று தெரிவித்துள்ள குமாரசாமி, 117 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் வசம் பாதுகாப்பாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் சொகுசுப் பேருந்தில் பிடதி ஈகிள்டன் விடுதிக்குச் செல்வதாகத் தகவல் வெளியான நிலையில், எம்.எல்.ஏ.க்கள் இருந்த பேருந்து நேராக ஆளுநர் மாளிகையை நோக்கி வந்தது. தங்கள் பலத்தைக் காட்டுவதற்காக ஆளுநர் மாளிகை முன்பு எம்.எல்.ஏ.க்கள் அணிவகுப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அணிவகுப்புக்கு ஆளுநர் வஜுபாய் வாலா அனுமதி மறுத்துவிட்டார். இரு கட்சிகள் சார்பிலும் 10 பேர் மட்டும் ஆளுநரைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆளுநருடனான குமாரசாமி சந்திப்பு முடிந்த பிறகு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிடதியிலுள்ள விடுதிக்குச் சென்றனர்.

போராட்டம்

மஜத - காங்கிரஸ் கூட்டணியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முன்பு மஜத தொண்டர்கள் திடீர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

காலையில் பாஜக, மாலையில் மஜத

கர்நாடக பிரஞ்யாவந்த ஜனதா கட்சி (கேபிஜேபி) என்ற கட்சி சார்பில் ராணிபென்னூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்ற சங்கர், காலையில் எடியூரப்பாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்து ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். ஆனால் மாலையில் குமாரசாமிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.

ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காவிடில் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்த காங்கிரஸ், மஜத கட்சிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எம்.பி.க்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon