மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 3 ஜுன் 2020

டெல்லியை மிரட்டும் புழுதிப் புயல்!

டெல்லியை மிரட்டும் புழுதிப் புயல்!

டெல்லியில் இன்று (மே 16) அதிகாலையில் ஏற்பட்ட புழுதிப் புயலினால் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 13 பேர் காயமடைந்தனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

காலை மூன்று மணிக்கு டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புழுதிப் புயல் குறித்து தகவல் தெரிவிக்க 78 அழைப்புகள் வந்துள்ளன. இதில் சோஹைல் என்ற 18 வயது இளைஞர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, சுவர் மேலே விழுந்து இறந்தார். இவருடைய குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. இதுபோன்று, தெற்கு டெல்லியில் இரண்டு பேர் காயமடைந்தனர். மரங்கள் கீழே விழுந்தது குறித்து தெரிவிக்க 59 போன் அழைப்புகளும், மின்சாரக் கம்பங்கள் சரிந்து விழுந்தது குறித்து தெரிவிக்க 5 போன் அழைப்புகளும், சுவர் இடிந்து விழுந்தது குறித்து தெரிவிக்க 11 போன் அழைப்புகளும் வந்துள்ளன. இதில் 13 கார்களும், ஒரு மோட்டர் சைக்கிளும் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் இந்திய வானிலை மையம், அடுத்த 48 முதல் 72 மணி நேரத்திற்கு பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரித்துள்ளது. கடந்த இரு தினங்களில் புழுதிப் புயல் காரணமாக ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், டெல்லி உட்பட ஐந்து வட இந்திய மாநிலங்களில் 80 பேர் பலியாகினர்.

ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாசல பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் 50 முதல் 70 கி.மீட்டர் வேகத்தில் புழுதி புயல் வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon