மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

ஆளுநர் முன்னுள்ள சட்ட வாய்ப்புகள்!

ஆளுநர் முன்னுள்ள சட்ட வாய்ப்புகள்!

பெரும்பான்மை பெறாத தனிப் பெருங்கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதா அல்லது பெரும்பான்மையோடு இருக்கும் தேர்தலுக்குப் பின்னர் அமைந்த கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பதா என்ற இரண்டு கேள்விகள் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவின் மேஜையில் இருக்கின்றன. ஆனால் ஆளுநரின் மௌனத்தால் இன்று (மே 16) இரண்டாவது நாளும் பரபரப்பாக நகர்ந்துகொண்டிருக்கின்றன கர்நாடக அரசியல் காட்சிகள்.

நேற்று (மே 15) தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ( மஜக) கட்சிக்கு அரசு அமைக்க நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரஸ் அளித்திருக்கிறது. அதேநேரம் 112 என்ற இலக்கைத் தொட எட்டு இடங்களே தேவை என்ற நிலையில் 104 இடங்களை வைத்திருக்கும் பாஜகவின் சட்டமன்றக் கட்சித் தலைவர் எடியூரப்பா ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறார். காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர்களும் ஆளுநரைச் சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் இப்போது ஆளுநரின் சட்டக் கடமை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதைப் பல்வேறு சட்ட வல்லுநர்கள் கூறியிருக்கிறார்கள்.

மூத்த வழக்கறிஞரும் தற்போதைய மத்திய அமைச்சருமான அருண் ஜேட்லி இதேபோன்றதொரு சூழல் 2017 மார்ச் மாதம் கோவாவில் நிலவியபோது தெரிவித்த கருத்துகள் இங்கே நினைவுகூரத் தக்கவை.

கோவாவில் என்ன நடந்தது?

40 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட கோவாவில் ஆட்சியமைக்க 21 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 2017 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 17 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாஜக 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கோவா பார்வர்டு, எம்.ஜி.பி. ஆகிய கட்சிகள் தலா 3 தொகுதிகளில் வெற்றி பெற்றன. தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. 3 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வென்றனர்.

தேர்தல் முடிவுகளின்படி தனிப் பெரும் கட்சியாகத் திகழ்ந்த காங்கிரஸ் ஆட்சியமைக்கப் போதுமான உறுப்பினர்களைப் பெறவில்லை. இந்நிலையில், கோவாவின் ஆளுநர் மிருதுளா சின்ஹாவைச் சந்தித்த பாஜகவின் மனோகர் பரிக்கர் தனக்கு மகாராஷ்டிரவாதி கோமந்தக், கோவா பார்வர்டு மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்ததற்கான ஆதாரங்களை ஒப்படைத்தார். இதையடுத்து ஆட்சியமைக்க பாரிக்கருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து 2017ஆம் மார்ச் 14ஆம் தேதி கோவா முதல்வராக பாரிக்கர் பதவியேற்றார். பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 22 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாகவும், 16 எம்.எல்.ஏ.க்கள் எதிராகவும் வாக்களித்தனர். ஒரு உறுப்பினர் அவையைப் புறக்கணித்தார். இதனால், அரசு பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

அந்த நிலையில் பாஜகவின் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான அருண் ஜெட்லி, “தொங்கு சட்டமன்றம் அமையும் பட்சத்தில், அந்த சட்டமன்றச் உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் கூடி தங்களுக்குள் ஒரு கூட்டணி அமைக்கும் பட்சத்தில் ஆளுநர் அந்தக் கூட்டணியையே ஆட்சி அமைக்க அழைக்கலாம். அதற்கான சட்டபூர்வமான உரிமை ஆளுநருக்கு உள்ளது. அந்தக் கூட்டணியின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கக் குறுகிய கால அவகாசத்தை ஆளுநர் கொடுக்கலாம்’’ என்று தனது ட்விட்டரில் சொல்லியிருந்தார்.

கோவா மாநிலத்துக்காக பாஜகவின் மூத்த சட்ட அறிஞர்கள் அன்று முன்மொழிந்த வாதத்தை இன்று கர்நாடகத்துக்காக முன் வைக்கும்போது காதை மூடிக்கொள்கிறார்கள் பாஜகவினர்.

மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் அணியின் தலைவருமான கே.சி. மிட்டல் என்ன சொல்கிறார்?

“இரு கட்சிகள் இணைந்து சட்டமன்றத்தில் தங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை ஆளுநரிடம் கொடுக்கும் பட்சத்தில், அவர்கள்தான் ஆட்சி அமைக்க அழைக்கப்பட வேண்டும். கூட்டணி அமைத்திருக்கும் இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் ஆதரிக்கும் கடிதங்களை ஆளுநரிடம் கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் பட்சத்தில் ஆளுநர் அவர்களைதான் ஆட்சி அமைக்க அழைத்தாக வேண்டும்’’ என்கிறார். மேலும்,

“கோவாவில் கடந்த வருடம் தனிப்பெரும் கட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோராமல் இருந்தது மிகப் பெரிய தவறு. மணிப்பூரில் தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரியபோதும் மறுக்கப்பட்டோம்’’ என்று நினைவுகூரும் மிட்டல்,

“மெஜாரிட்டியை வைத்திருக்கும் அணி ஆட்சி அமைக்க உரிமை கோராத பட்சத்தில் தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கலாம்’’ என்று குறிப்பிடுகிறார்.

ஆளுநர் முன் அணிவகுப்பு என்றெல்லாம் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் மிட்டல் அதுபற்றிக் கூறும்போது, “ஆரம்ப கட்டத்தில் இரு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துக்கள்கூடத் தேவையில்லை. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்குள் பரஸ்பரம் ஆதரவு அளிக்கும் கடிதங்களைத் தத்தமது கையெழுத்தோடு ஆளுநரிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு அடுத்த கட்டமாக ஆளுநர் அவசியம் என்று கருதினால் மட்டுமே ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் அணி வகுப்பு ஆளுநர் மாளிகையில் நடைபெற வேண்டும். மற்றபடி பெரும்பான்மையைச் செயல்முறையில் நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம் மட்டுமே’’ என்கிறார் மிட்டல்.

மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வாலும் இதுபற்றி தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“தனிப்பெரும் கட்சிக்குப் பெரும்பான்மை இல்லை என்பதை ஆளுநர் அறிந்துகொண்டார் என்றால், அதன் பின் தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்படுகிற பெரும்பான்மை கொண்ட கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்கலாம். இதுதான் கோவாவிலும், மணிப்பூரிலும் நடந்தது. அங்கே தனிப் பெரும் கட்சி ஆட்சி அமைக்க அழைக்கப்படவில்லை.

காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து தங்களுடைய பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை ஆளுநரிடம் அளித்த பிறகு அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பதே ஆளுநரின் கடமை.

ஆனால் பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தும் தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்றால், அவர்களை குதிரை பேரத்துக்கு ஆளுநரே ஊக்கப்படுத்துகிறார் என்றே அர்த்தம் கொள்ள நேரிடும். மேலும் தேர்தலுக்குப் பிறகான கூட்டணிகள் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டதற்குப் பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன’’ என்கிறார்.

கர்நாடக ஆளுநர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறிய நாடே காத்திருக்கிறது!

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon