மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

ஒரு எம்.எல்.ஏ.வின் விலை 100 கோடி!

ஒரு எம்.எல்.ஏ.வின் விலை 100 கோடி!

100 கோடி ரூபாய் பணம் மற்றும் அமைச்சர் பதவி தருவதாகக் கூறி தங்கள் தரப்பு எம்.எல்.ஏ.வை இழுக்க பாஜக முயற்சி செய்துவருவதாக மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடக அரசியல் களத்தில் நிமிடத்துக்கு நிமிடம் பல்வேறு திடீர் திருப்பங்கள் நிகழ்ந்துவருகின்றன. காங்கிரஸுடன் இணைந்து மஜத ஆட்சியமைக்க உரிமை கோரும் நிலையில், இன்று காலை குமாரசாமியை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சந்தித்து பாஜகக்கு ஆதரவு அளிக்கக் கோரியதாகத் தகவல் வெளியானது.

மஜத எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த குமாரசாமியிடம் இது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "ஜவடேகர் என்பவர் யார்? யார் அந்த ஜென்டில்மேன். பாஜகவைச் சேர்ந்த யாரும் என்னை சந்திக்கவில்லை. அது ஒரு பொய்ச் செய்தி" என்று பதிலளித்தார். "எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களைத் தங்கள் பக்கம் இழுக்க பாஜக 100 கோடி பணமும், அமைச்சர் பதவியும் தருவதாக ஆசை வார்த்தை கூறுகிறது. இந்தக் கறுப்புப் பணம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? ஏழைகளுக்குச் சேவை செய்கிறவர்களுக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது? இப்போது வருமான வரித் துறை என்ன செய்துகொண்டிருக்கிறது?" என்று கேள்வி எழுப்பிய குமாரசாமி, "பாஜகவின் சூழ்ச்சியை கர்நாடக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "பாஜக, காங்கிரஸ் என இரு தரப்பிலிருந்தும் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை சாதாரண வார்த்தையாகக் கூறவில்லை. 2004 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த என்னுடைய முடிவு எனது தந்தையின் அரசியல் வாழ்க்கையில் கரும்புள்ளியாகவே இருக்கிறது. அந்தக் கரும்புள்ளியை நீக்குவதற்குக் கடவுளாகப் பார்த்து எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துள்ளார். எனவே நாங்கள் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ளோம்" என்று குறிப்பிட்டார். ஆபரேஷன் கமலின் வெற்றியை மறந்துவிடக் கூடாது. பாஜகவிலிருந்து வெளியேறி எங்களுக்கு ஆதரவளிக்க நிறைய எம்.எல்.ஏ.க்கள் தயாராக உள்ளனர். எங்கள் தரப்பிலிருந்து பாஜக ஒரு எம்.எல்.ஏ.வை இழுத்தால் அவர்கள் தரப்பிலிருந்து நாங்கள் இரண்டு எம்.எல்.ஏ.க்களை இழுப்போம்" என்றும் சவால் விடுத்துள்ளார். குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் எந்த முடிவையும் எடுத்துவிடாதீர்கள் என்று நாங்கள் ஆளுநரிடமும் வலியுறுத்தியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ராஜ வெங்கடப்ப நாயக்கா, வெங்கட ராவ் நாடகவுடா ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. இதனால் அவர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இரு எம்.எல்.ஏ.க்களும், "நாங்கள் குமாரசாமியுடன்தான் இருக்கிறோம். எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள பெங்களூரு விரைந்துகொண்டிருக்கிறோம்" என்று விளக்கமளித்தனர்.

ஜவடேகரின் மறுப்பு

குமாரசாமியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த ஜவடேகர், "100 கோடி கொடுத்து எம்.எல்.ஏ.க்களை பாஜக விலைக்கு வாங்க முயல்வதாகக் கூறியிருப்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு, விலை கொடுத்து வாங்குவதில் காங்கிரஸ்தான் கில்லாடி" என்று தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் பதவி கேட்பதாக வெளியான தகவலை முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சிவக்குமார் மறுத்துள்ளார். "தற்போது எதையும் கேட்கும் மனநிலையில் நாங்கள் இல்லை. கர்நாடகாவில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாகும். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எங்களுடன்தான் உள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். ஆனால் எங்களுக்கு இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை. ஆளுநரிடமிருந்து பதில் வரும் என்று காத்திருக்கிறோம். அவரைச் சந்திக்கும்போது குமாரசாமிக்கு காங்கிரஸ் - மஜத எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டுக் கொடுத்த இரண்டு ஆதரவுக் கடிதங்களையும் கொடுப்போம்" என்று தெரிவித்தார்.

"எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் குதிரை பேரத்திற்கு அனுமதியளிக்கக் கூடாது. ஆளுநர் அரசியலமைப்புக்கு எதிராகச் செயல்பட முடியாது. இந்த விவகாரத்தில் ஆளுநர் அரசியல் சார்பு இல்லாமல், அரசியல் அமைப்புச் சட்டப்படி செயல்படுவார் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்றும் கூறியுள்ளார்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon