மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

ஹீரோவை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்!

ஹீரோவை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்!

தமிழ் சினிமாவில் ஹீரோ என்பதை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்; திறமை உள்ளவர்களையும் அவர்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நடன இயக்குநர் தினேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ஒரு குப்பைக் கதை. காளி ரங்கசாமி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மனிஷா யாதவ் நாயகியாக நடித்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை வெளியிடுகிறது. வருகிற மே 25ஆம் தேதி படம் வெளியாகிறது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் சினிமாஸில் இன்று (மே 16) நடைபெற்றது. இதில் நடிகர்கள் உதயநிதி, ஆர்யா, சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

தினேஷ் மாஸ்டருக்கும் எனக்கும் நல்ல நட்பு இருக்குது எனப் பேசத் துவங்கிய உதயநிதி, “எனது முதல் மூன்று படங்களுக்கும் தினேஷ் மாஸ்டர் தான் நடனம் சொல்லிக்கொடுத்தார். என்னை நடனமாட ஊக்குவித்தவர் இவர்தான். எங்கள் இருவருக்கும் ஒரு அண்ணன், தம்பிக்குண்டான பாசம் இருக்கிறது. இப்படி இருக்கும்போது, இவர் ஏன் ஹீரோவாக நடிக்கிறார் என்று முதலில் யோசித்தேன். பின்னர் படம் பற்றி கேள்விப்பட்ட நான், படத்தை நாமே வெளியிடலாம் என்று முடிவு செய்தேன். ஒரு குப்பைக் கதை படம் மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும். நல்ல படங்கள் வந்தால் பாராட்டுவதும், சுமாரான படங்களை விமர்சிப்பதும் வழக்கம்தான். அந்த வகையில் இந்தப் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வரும் என்று நம்புகிறேன்” என்றார்.

பெண்கள் கூடவே இருந்ததனால கலராகிவிட்டேன் எனக் கலகலப்பாகப் பேசத் துவங்கிய ஆர்யா, “நான் நடிச்ச படத்தோட பாடல்களப் பார்த்திட்டு என் வீட்டில எல்லாரும் ஈஸியா கமெண்ட் பண்ணிட்டுப் போயிருவாங்க. ஆனால் இதுக்குப் பின்னாடி எவ்வளவு பெரிய உழைப்பு இருக்குன்னு அவங்களுக்குத் தெரியாது. ஒரு மூணு மணி நேரம் பயிற்சிக்குப் பின்னாடி எனக்கு சரியா டான்ஸ் வரலைன்னா... உடனே அவர் யோசிச்சிட்டு, என்னை மாதிரியே எல்லாரையும் ஆட வைப்பார். ஒரு பாடலுக்கு மெனக்கெடுவதும் அதே சமயம் எது சரியா அமையலன்னா... எப்படி அதை மாத்தனும்னு தெரிஞ்சு வச்சுருப்பவர். அவருக்கு நடிக்கிறதுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால் மறுத்துவிட்டார். இந்தப் படத்தை தேர்வு செய்து நடித்திருக்கிறார்னா.. கண்டிப்பாக நல்ல மெசேஜ் இருக்கும்” என்றார்.

சீமராஜா படத்தின் ஃபைனல் ஷெட்யூலுக்காகத்தான் தாடியுடனும் அதிகமான முடியுடனும் இருக்கிறேன் என ரசிகர்கள் கேள்வி கேட்கும் முன்பாகவே காரணத்தை விளக்கிய சிவகார்த்திகேயன், “தினேஷ் மாஸ்டர் போன் பண்ணி சொன்னதும் நான் வரேன்னு சொன்னது என்னுடைய கடமையாகத்தான் நினைக்கிறேன். ஏன்னா நான் ஒரு சின்ன ஹீரோ என்று இல்லாமல் எனக்கு நல்லா நடனம் சொல்லிக்கொடுத்தார். இந்த சாங்க் மூலம் இந்த ஹீரோவை மக்களிடம் எப்படி கொண்டுசேர்க்கணும் அப்படிங்கிறத நினைச்சு ஒர்க் பண்ணுவார். நான் முதன்முதலா நடிக்கும்போது, நல்லா விஜய் டிவி போய்க்கிட்டிருக்கு; ஏம்ப்பா இப்படி ஒரு முடிவு எடுக்கிற; ஹீரோவா நடிக்கிறதெல்லாம் ரொம்ப கஷ்டம் அப்படின்னு சொன்னாங்க. அப்போ நான் சொன்னேன், நான் ஹீரோல்லாம் கிடையாது; நான் லீடு ஆக்டர்தான்னு சொன்னேன். இங்க ஹீரோங்கிறத மக்கள்தான் முடிவு பண்ணுவாங்க. சரியான திறமை இருக்கிறவங்களை அவங்கதான் தேர்ந்தெடுக்கிறாங்க. மக்கள் இந்தப் படத்தை ஏத்துக்கும்போது நீங்களும் ஹீரோதான் சார். கதையை நம்பி இந்த படத்துல இறங்கியிருக்கிறதே இந்தப் படம் பெரிய வெற்றி என்பதைக் காட்டுகிறது. வாழ்த்துகள் மாஸ்டர் சார்” என்றார்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon