மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

‘பூமராங்’ ஆன லிங்காயத் வாக்குகள்!

‘பூமராங்’ ஆன லிங்காயத் வாக்குகள்!

கர்நாடகத் தேர்தல் முடிவுகள் வெளியாகி பல கட்சிகளுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ள நிலையில், காங்கிரஸ் அதிகம் ஏதிர்பார்த்த லிங்காயத் சமூகத்தினர் வாக்குகள் அக்கட்சிக்கு எதிராகவே பதிவாகியுள்ளன.

கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்த பசவண்ணரால் தொடங்கப்பட்டது லிங்காயத் வழிபாடு. 12ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டதாகக் கூறப்படும் லிங்காயத் வழிபாட்டைப் பின்பற்றும் மக்கள், சிவலிங்கத்தைக் கடவுளாக வணங்கினாலும் வேதங்களைப் பின்பற்றுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களைத் தனி மதத்தினராக அறிவிக்கவேண்டும் என்று லிங்காயத் சமூகத்தினர் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்த நிலையில், மார்ச் 19ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் லிங்காயத்தை தனி மதமாக அறிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவு காங்கிரஸுக்கு தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகளோ எதிர்மறையாக அமைந்துள்ளன.

லிங்காயத் சமூகத்தினர் அதிகமுள்ள பாம்பே கர்நாடகா மற்றும் மத்திய கர்நாடகாவில் பாஜக வெற்றிகளைக் குவித்துள்ளதே இதற்குச் சான்று.

பாம்பே கர்நாடகாவில் உள்ள 50 தொகுதிகளில் 30 தொகுதிகளை பாஜக வென்றுள்ளது. 2013இல் காங்கிரஸ் வசம் 31 தொகுதிகள் இருந்த நிலையில் தற்போது 17ஆகக் குறைந்துள்ளது. மத்திய கர்நாடகாவைப் பொறுத்தவரை 2013இல் பாஜக கைவசம் மூன்று தொகுதிகள் இருந்த நிலையில், இந்தத் தேர்தலில் அந்த எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. காங்கிரஸோ ஆறு தொகுதிகளை இழந்து 13இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் கர்நாடகாவிலும்கூட பாஜக 10லிருந்து 15 ஆக தன் தொகுதிக் கணக்கை அதிகரித்துக்கொண்டது.

தேர்தல் சமயத்தில் லிங்காயத்துகள் சமாச்சாரம்தான் வாக்காளர்கள் மத்தியில் பேச்சாக இருந்துவந்தது. கர்நாடக காங்கிரஸ் அமைச்சரவை, லிங்காயத்துகள் கேட்ட லிங்காயத்-வீரசைவ மதக் கோரிக்கையை ஏற்காமல் சிறுபான்மை மதமாகப் பரிந்துரை செய்ய முடிவெடுத்தது. இதனையடுத்து லிங்காயத்-வீரசைவர்களும் காங்கிரசாரும் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்துக்கொண்டனர். சுமார் 5% வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என்று காங்கிரஸ் தப்புக் கணக்குப் போட்டது, அப்படி நடக்கவில்லை.

சித்தராமையா அமைச்சரவையில் இருந்த லிங்காயத் பிரிவைச் சேர்ந்த வினய் குமார் குல்கர்னி, பசவராஜ் ராயரட்டி, ஷரண் பிரகாஷ் பாட்டீல் ஆகியோர் படுமோசமான தோல்விகளைச் சந்தித்தனர். காங்கிரஸ் வேட்பாளரும், லிங்காயத் இயக்கமான ராஷ்ட்ரிய பசவசேனே அமைப்பின் தலைவருமான வினய் குல்கர்னி தார்வார் தொகுதியில் போட்டியிட்டார். இவர் பாஜகவின் அம்ருத் தேசாயிடம் 20,340 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் உட்கட்சி வட்டாரங்கள், லிங்காயத்-வீர சைவர்களைப் பிரித்தாளும் தந்திரம்தான் திருப்பி அடித்தது என்பதை ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் வீர சைவர்கள் சேர்ந்து மேற்கொண்ட பிரச்சார வாக்கியமான ‘இந்து சமுதாயத்தை உடைக்கிறது காங்கிரஸ்’ என்பது சூடுபிடித்து உத்வேகம் பெற்றது என்பதை மறுப்பதற்கில்லை.

காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லியே இந்த காங்கிரஸ் லிங்காயத் விவகாரத்தைக் கையிலெடுக்காமல் இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “தேர்தலுக்கு முன்பாக லிங்காயத் சமூகத்தினர் விவகாரத்தை காங்கிரஸ் கையிலெடுத்திருக்கக் கூடாது. அதுவே கட்சியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

லிங்காயத் சமூகத்தினருக்கு சிறுபான்மை அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தைக் கையிலெடுத்ததற்கு கட்சியின் ஒரு பகுதி உறுப்பினர்கள் கவலை தெரிவித்திருந்தனர். இந்த விவகாரத்தில் கட்சி தன்னைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டியுள்ளது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon