மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

ஐபிஎல்: இரண்டுக்குப் போட்டியிடும் ஐந்து!

ஐபிஎல்: இரண்டுக்குப் போட்டியிடும் ஐந்து!

ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகளே ப்ளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறும். தற்போதைய நிலவரப்படி ஹைதராபாத், சென்னை இரு அணிகளும் ப்ளே ஆஃபுக்கு தகுதி பெற்றுவிட்டன. டெல்லி அணிக்கு இனி வாய்ப்பு இல்லை என்றாகிவிட்டது. மீதம் உள்ள ஐந்து அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றின் எஞ்சிய இரண்டு இடங்களுக்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.

ப்ளே ஆஃப் சுற்றின் அடுத்த இரு அணிகளைத் தேர்வு செய்வதில் இனி நடக்கவிருக்கும் போட்டிகளின் முடிவுகள் முக்கிய பங்கு வகிக்க உள்ளன.

மும்பையின் ப்ளே ஆஃப் வாய்ப்பு

மும்பை அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி ஐந்து வெற்றிகளைப் பெற்று 10 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. இனிவரும் போட்டிகளில் மும்பை அணி, பஞ்சாப் மற்றும் டெல்லியை எதிர்கொள்கிறது. இதில் கட்டாய வெற்றிப் பதிவு செய்தால் அந்த அணிக்கு 14 புள்ளிகள் கிடைத்துவிடும். இந்த அணியின் நெட் ரன்ரேட் பாசிட்டிவ்வாக இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும்.

பெங்களூருவின் ப்ளே ஆஃப் வாய்ப்பு

தற்போது பெங்களூரு அணி 10 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. அந்த அணி எஞ்சிய போட்டிகளில் ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகளுடன் மோத உள்ளது. இந்த இரண்டிலும் வெற்றியைப் பதிவு செய்தால் 14 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்கும்.

பஞ்சாப் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு

தற்போதைய சூழலில் பரிதாபமான நிலையில் உள்ளது பஞ்சாப் அணிதான். ரவிச்சந்திரன் அஷ்வின் தலைமையிலான இந்த அணி தொடரின் முதல் பாதியில் (முதல் ஆறு போட்டிகளில் ஐந்து வெற்றிகள்) எந்த வேகத்தில் மேலே சென்றதோ பின் பாதியில் (அடுத்த ஆறு போட்டிகளில் ஒரு வெற்றி) அதே வேகத்தில் சரிவைச் சந்தித்துள்ளது. தற்போது பஞ்சாப் அணி 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த அணி எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகிவிடும். ஒன்றில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃபுக்குச் செல்ல நெட் ரன்ரேட்டின் உதவி தேவைப்படும்.

ராஜஸ்தானின் ப்ளே ஆஃப் வாய்ப்பு

இந்த அணிக்கு இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டுமே மீதம் உள்ளது. தற்போது ராஜஸ்தான் 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருந்தாலும் அந்த அணியின் நெட் ரன்ரேட் நெகட்டிவ்வாக உள்ளது. எனவே அந்த அணி பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கொல்கத்தாவின் ப்ளே ஆஃப் வாய்ப்பு

ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா அணி, இம்முறை 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஹைதராபாத் உடனான கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் இந்த அணி 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃபுக்கு முன்னேறிவிடும். தற்போது அந்த அணியின் நெட் ரன்ரேட் நெகட்டிவ்வாக உள்ளதால் அடுத்த போட்டியில் தோல்வியடைந்தால் வெளியேறும் வாய்ப்பும் உள்ளது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon