மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

வரி செலுத்தாத கூகுள்!

வரி செலுத்தாத கூகுள்!

கூகுள் இந்தியா நிறுவனம் தனது தாய் நிறுவனத்துக்கு அனுப்பும் விளம்பர வருவாய்க்கு வரி விதிக்கப்பட வேண்டும் என்று வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.

இந்தியாவில் விளம்பரங்கள் மூலமாக ஈட்டப்படும் வருவாயைக் கூகுள் இந்தியா நிறுவனம் அதன் தாய் நிறுவனமான கூகுள் அயர்லாந்துக்கு அனுப்புகிறது. இந்த வருவாய் ராயல்டிக்கு உட்பட்டது என்றும், வரிக்கு உரிய வருவாய் என்றும் வரித் துறை கோரியது. வரித் துறையின் கோரிக்கையை வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது. வரித் துறையின் கோரிக்கையை வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் பெங்களூரு அமர்வு தனது 331 பக்க உத்தரவில் உறுதி செய்துள்ளது. இந்த உத்தரவு குறித்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக கூகுள் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

2012-13 வருமான வரி மதிப்பீட்டு ஆண்டில், வரி விதிப்பு இல்லாமல் ரூ.1,114.91 கோடியைக் கூகுள் இந்தியா நிறுவனம் தன் தாய் நிறுவனமான கூகுள் அயர்லாந்து நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளதை வரித் துறை கண்டுபிடித்துள்ளது. ஆகையால் இந்த வருவாய் பரிமாற்றத்துக்கு ரூ.258.84 கோடி வரி செலுத்தப்பட வேண்டும் என்று வரித் துறை கோரியது. இந்திய விளம்பரதாரர்களுக்கு தாம் ஒரு விநியோகரைப் போலவும், மறு விற்பனையாளரைப் போலவுமே இருப்பதாகக் கூகுள் இந்தியா சமர்ப்பித்துள்ள அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளது. கூகுள் இந்தியா நிறுவனம் கூகுள் அயர்லாந்து நிறுவனத்துக்கு வழங்கும் வருவாய் தொகை ராயல்டிக்கு உட்பட்டது என்று வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் பேசுகையில், “இந்தியாவின் அனைத்து வரிச் சட்டங்களுக்கும் நாங்கள் இணங்கியுள்ளோம். அனைத்து வரிகளையும் நாங்கள் செலுத்தி வருகிறோம். நாங்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்” என்று தெரிவித்துள்ளார். 2007-08ஆம் ஆண்டுக்கும் 2012-13ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் கூகுள் அயர்லாந்துக்குக் கூகுள் இந்தியா அனுப்பியுள்ள மொத்த தொகையான 1,457 கோடி ரூபாய் ராயல்டி தொகை என்றும் வரிக்கு உட்பட்டது என்றும் வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் தன் உத்தரவில் உறுதி செய்துள்ளது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon