மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விஜய்

இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விஜய்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பிறந்த நாளுக்கு வித்தியாசமான பரிசளித்தும், இயக்குநராக உருவெடுத்திருக்கும் அருண்ராஜா காமராஜுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தும் இருவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நடிகர் விஜய்.

சந்தோஷ் நாராயணனின் பிறந்த நாளான நேற்று (மே 15) திரைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சந்தோஷ் தனது மனைவியுடன் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். திரைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவிக்க, நடிகர் விஜய் கிரிக்கெட் பேட் ஒன்றை அவருக்கு அனுப்பி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

சந்தோஷுக்கு இப்படி ஒரு பரிசை விஜய் அளித்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியமான ஒன்றுதான். ஆனால் இந்தப் பரிசை சந்தோஷுக்கு அளித்திருப்பது பைரவா திரைப்படம். அந்தப் படத்தில் விஜய் மிகவும் ரசித்து நடித்த காட்சி, வில்லன்களோடு கிரிக்கெட் விளையாடுவது. அந்தக் காட்சிக்கு சந்தோஷ் சிறப்பாக பின்னணி இசையமைத்திருப்பதாக அப்போதே அவரைப் பாராட்டியிருந்தார் விஜய். அந்த நிகழ்வை நினைவுகூர்ந்த விஜய் அவருக்கு இப்படியொரு பரிசை அளித்திருக்கிறார்.

இதைப் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சந்தோஷ், “விஜய் சாரிடம் இருந்து மிகச் சிறப்பான ஆச்சரியப் பரிசு கிடைத்திருக்கிறது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பேட்டில், உங்கள் கையெழுத்திட்டுத் தந்ததில் மகிழ்ச்சி. இது எனக்கு மிகச் சிறப்பான தருணம். நன்றி அண்ணா” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பல துறைகளிலும் தனது பங்களிப்பைச் செலுத்திவரும் அருண்ராஜா காமராஜ், கனா படத்தின் மூலம் இயக்குநராக அடுத்த கட்டத்திற்குச் சென்றிருக்கிறார். நேற்று கனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் வெளியாயின. அதற்கு திரைத் துறையைச் சார்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் படத்தின் அறிவிப்பைப் பார்த்த விஜய் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜய் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து அருண்ராஜா தனது ட்விட்டரில், “என்னை உற்சாகப்படுத்தவும் பாராட்டவும் தவறாத எனது அருமைமிக்க இதய தளபதி அண்ணா, காலை எழுந்தவுடன் உங்களது வாழ்த்தைப் பார்த்தேன். உங்களது இந்த ஊக்கமான வார்த்தைகள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாற்றிவிட்டது. உங்களிடம் இருந்து வாழ்த்தும் ஆசீர்வாதமும் பெற்றதில் நான் பாக்கியம் செய்துள்ளேன். உங்களுக்கு நன்றி மட்டும் சொன்னால் தகாது. உங்களை எப்போதுமே நேசிக்கும் அருண்ராஜா காமராஜ்” என்று குறிப்பிட்டுள்ளார்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon