மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

வாரணாசி பாலம் விபத்து: அதிகாரிகள் மீது வழக்கு!

வாரணாசி பாலம் விபத்து: அதிகாரிகள் மீது வழக்கு!

மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் கட்டப்பட்டுவரும் மேம்பாலம் விழுந்ததில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகள் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாரணாசியின் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் அருகே புதியதாக ஒரு மேம்பாலம் கட்டப்பட்டுவந்தது. இந்தப் பாலம் நேற்று (மே 15) திடீரென இடிந்து விழுந்தது. ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள இந்தப் பாலம் விழுந்ததில் கட்டட இடிபாடுகளில் சிக்கி சுமார் 18 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பாலத்தின் கீழே நின்றுகொண்டிருந்த இரு சக்கர வாகனங்களும், கார்களும் சேதமடைந்துள்ளன. இந்தச் சம்பவம் வாரணாசி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து குறித்து உடனடியாக விசாரணைக் குழுவை அமைத்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், 48 மணி நேரத்தில் அறிக்கை தர உத்தரவிட்டுள்ளார். மேலும், விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் பாலம் கட்டுவதற்கு நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிசி 304 (அலட்சியத்தால் விபத்து நேர்வது), 308 (கொலை செய்ய முயலுதல்) மற்றும் 427 (இடையூறு) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தலைமை திட்ட மேலாளர் எச்.சி.திவாரி, திட்ட மேலாளர் கே.ஆர். சூடான், உதவி பொறியாளர் ராஜேஷ் சிங் மற்றும் பொறியாளர் லால் சந்த் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கட்டடப் பணிகளை மேற்கொண்ட உபி சேது நிகம் அமைப்பு, போதிய பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளாததாலும், போக்குவரத்து நெரிசலைச் சீர் செய்யாமல் இருந்ததாலும் விபத்து ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சில நாட்களாக இப்பகுதியில் புழுதிப் புயல் தாக்கிவருகிறது. இதன் காரணமாகவும் பாலம் இடிந்து விழுந்திருக்கலாம் என்று பிரிட்ஜ் கார்ப்பரேஷன் எம்டி ஆர். மிட்டல் கூறியுள்ளார்.

இது தவிர, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள பிரேத பரிசோதனை மையத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை ஒப்படைக்க ரூ.200 லஞ்சம் வாங்கியதாக சில ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon