மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

இயற்பியல் அறிஞர் சுதர்சன் மறைவு!

இயற்பியல் அறிஞர் சுதர்சன் மறைவு!

சென்னையில் பிறந்து டெக்சாஸில் குடியேறிய கணித அறிவியல்துறைக் தலைவரும், இயற்பியல் கோட்பாளருமான முனைவர் இ.சி.ஜி.சுதர்சன் (ஜார்ஜ் சுதர்சன்) கடந்த திங்கட்கிழமை (மே 14) தனது 86 வயதில் டெக்சாஸில் காலமானார்.

இயற்பியல் துறையில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ள இவர் பலமுறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். . இவரது கோட்பாடுகளைப் பயன்படுத்திய ரிச்சார்டு ஃபெயின்மேன், முர்ரே கெல் மான், ஷெல்டன் க்ளாஸ்கோ, அப்தஸ் சலாம் மற்றும் ஸ்டீவன் வெயின்பெர்க் ஆகியோருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. அடிப்படை இயற்பியலில் சுதர்சனுக்கு முக்கிய பங்கு உள்ளதாக சிறந்த அறிவியலாளர்களான ஸ்டீபன் ஹாகிங், ரோஜர் பென்ரோஸ் பீட்டர் ஹிக்ஸ் ஆகியோர் பலமுறை கூறியுள்ளனர்.

ஜார்ஜ் சுதர்சன் 1931ஆம் ஆண்டு திருவாங்கூரில் பிறந்தார். கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்த இவர் 20 ஆண்டுகள் கழித்து இந்து மதத்திற்கு மாறியுள்ளார். இவர் தனது பட்டப்படிப்பை சென்னை கிறித்துவக் கல்லூரியில் 1951ஆம் ஆண்டு முடித்தார். அதனைத் தொடர்ந்து மும்பையிலுள்ள டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில் (TIFR) சேர்ந்து ஹோமி பாபா போன்ற அறிவியலாளர்களுடன் பணியாற்றினார்.

ஒருமுறை அமெரிக்க அறிவியலாளரான ராபர்ட் மர்சக்கை சந்திக்கும் வாய்ப்பு சுதர்சனுக்கு கிடைத்தது. அதன் பின்னர், நியூயார்க்கின் ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் ராபர்ட் மர்சக்கின் வழிகாட்டுதலின் கீழ் மாணவராகச் சேர்ந்தார். சுதர்சன் இயற்பியலின் பல துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அளித்துள்ளார். ராபர்ட் மர்சக்குடன் இணைந்து வலிகுறை இடைவினையின் வி-ஏ கோட்பாட்டை முன்வைத்தவர் இவர்தான்.

பின்னர் இந்த கோட்பாட்டை விரிவுபடுத்திய ஷெல்டன் க்ளாஸ்கோ, அப்தஸ் சலாம் மற்றும் ஸ்டீவன் வெயின்பெர்க் ஆகியோருக்கு 1979ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.

1958ஆம் ஆண்டு சுதர்சன் பிஎச்டி பட்டம் பெற்றார். அதன் பின்னர் 1969ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸுக்கு குடிபெயர்ந்தார்.

1969 முதல் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்திய அறிவியல் கழகத்திலும் மூத்த இயற்பியல் பேராசிரியராக இருந்துவந்தார். இவருடைய மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள கணிதவியல் மற்றும் இயற்பியல் அறிஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனா்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon