சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் நேற்று நடைபெற்ற சந்தை விற்பனையில் காய்கறிகள் அதிகளவில் விற்பனையாயின.
சேலம் மாவட்டம் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகளில் நேற்று (மே 15) காய்கறிகள் விற்பனை அமோகமாக இருந்தது. வைகாசி மாதம் தொடங்கியுள்ளதோடு நேற்றைய தினம் அமாவாசை என்பதால் உழவர் சந்தைகளில் காய்கறிகள் விற்பனை அதிகமாகக் காணப்பட்டது. சூரமங்கலம் உழவர் சந்தையில் 210 விவசாயிகள் மொத்தம் 44,690 கிலோ காய்கறிகளை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். இவை மொத்தம் ரூ.13,42,885க்கு விற்பனையாயின.
வைகாசி, அமாவாசையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளிலும் மொத்தம் 2,24,000 கிலோ காய்கறிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. இவை மொத்தம் ரூ.64,14,215 க்கு விற்பனையாகியுள்ளதால் விற்பனையாளர்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.