மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

செய்தியாளர்கள் மீது நடவடிக்கை: கோர்ட் மறுப்பு!

செய்தியாளர்கள் மீது நடவடிக்கை: கோர்ட் மறுப்பு!

எஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

அண்மையில் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் ஃபேஸ்புக்கில் கருத்துப்பதிவு செய்ய, அது கடும் கண்டனத்துக்கு உள்ளானது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்ட நிலையிலும் பத்திரிகையாளர்கள் சேகர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்குப் போட்டனர். சேகரின் முன் ஜாமீன் மனுவையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இந்நிலையில் சேகர் வசிக்கும் மயிலாப்பூர் வீட்டின் முன் கூடிய பத்திரிகையாளர்கள் சேகரை கண்டித்து போராட்டம் நடத்தினர். இதில் சிலர் அவர் வீட்டில் கல் எறிந்தனர்.

இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவர் நேற்று வழக்குத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “எஸ்.வி.சேகர் வீடு முன்பு போராட்டம் நடத்திய 35 பத்திரிகையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது ஆனால் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி அல்லது சிபிஐக்கு மாற்ற வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவானது நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மே 16) விசாரணைக்கு வந்தது, மனுதாரரின் வாதத்தை கேட்ட நீதிபதிகள், ‘’ஏன் எஸ்.வி.சேகரே நீதிமன்றத்தை நாடலாமே, இந்த பெட்டீஷனை போட நீங்கள் யார்” என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இதனை பொது நல மனுவாக ஏற்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடியும் செய்துள்ளனர்.

எஸ்.வி.சேகரைக் கைது செய்யக்கோரி போராட்டம்

இதற்கிடையே இன்று திராவிடர் விடுதலைக் கழகத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள், எஸ்.வி.சேகரை கைது செய்ய வலியுறுத்தி சென்னை காவல் ஆணையரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உடனடியாக காவல்துறை அவர்களை கைது செய்தது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon