மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

பாலு மகேந்திராவைக் கெளரவிக்கும் மாணவர்கள்!

பாலு மகேந்திராவைக் கெளரவிக்கும் மாணவர்கள்!

இயக்குநர் பாலு மகேந்திராவின் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாட அவரது மாணவர்கள், வருகிற சனிக்கிழமையன்று (மே 19) நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவிற்கான வரலாறு என்று எடுத்துக்கொண்டால் அதில் பாலு மகேந்திரா இல்லாமல் எழுதிவிட முடியாது. அந்த அளவிற்கு அவரது பணிகள் அளப்பறியன. மலையாளத் திரையுலகில் ஒளிப்பதிவாளராக தன் கலைப் பயணத்தைத் தொடங்கிய பாலு மகேந்திரா, தன்னை இயக்குநராக வெளிப்படுத்திய கன்னடப் படம் கோகிலா. தமிழில் இயக்கிய படம் அழியாத கோலங்கள்.

அவர் இயக்கத்தில் உருவான மூடுபனி, மூன்றாம் பிறை, வீடு, சந்தியா ராகம், மறுபடியும், சதிலீலாவதி ஆகிய படங்கள் குறிப்பிடத்தகுந்தவை. தலைமுறை அவரின் இயக்கத்தில் உருவான கடைசிப் படம். இப்படத்தின் மூலம் பாலு மகேந்திரா நடிகராகவும் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

பாலு மகேந்திரா தன்னோடு மட்டும் தனது கலைப் பயணத்தை நிறுத்திக்கொள்ளாமல் அவரது மாணவர்களின் வாயிலாகவும் தனது கலைப் பயணத்தைத் தொடர்கிறார். அந்த வகையில் ஜேடி, ஜெர்ரி, பாலா, வெற்றிமாறன், ராம், சீனு ராமசாமி என அவரது பட்டறையில் பயின்று சினிமாவில் பிரபலமாகிவருபவர்களின் பட்டியல் தொடர்கிறது.

இந்நிலையில் பாலு மகேந்திரா பட்டறையில் பயின்ற மாணவர்கள் அவரது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், ‘கதைகளின் நேரம்’ என்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்வு வருகிற மே19ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள RKV ஸ்டுடியோவில் நடைபெறுகிறது. நிகழ்வில் முதலாவதாக பாலு மகேந்திரா இயக்கிய நிலம் குறும்படம் ஒளிபரப்பப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பட்டறை மாணவர்கள் இயக்கிய குறும்படங்களும் ஒளிபரப்பப்படுகின்றன.

இந்நிகழ்ச்சி தொடர்பாக நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, “இதை பல ஆண்டுகளாக திட்டமிட்டோம். பல பேர் அவருக்கான விழாக்கள் நடத்தினார்கள். மாணவர்களாகிய எங்களால் எதுவும் செய்ய முடியாமல் இருந்தது. நாங்களும் சினிமாவை நோக்கிய பயணங்களில் இருந்தோம். மேலும் அன்றைக்கு எங்களுக்கு சரியான பொருளாதார வாய்ப்புகள் அமையவில்லை. இந்த அளவிற்கு குறும்படங்களின் எண்ணிக்கையும் இல்லாமல் இருந்தது. இந்த ஆண்டு இவையனைத்திற்கும் கைகூடிவந்தது. எனவே தற்போது எங்கள் ஆசானுக்காக நிகழ்வு நிகழ்த்தவுள்ளோம். இயக்குநர் ராம், பாலாஜி தரணிதரன், தனஞ்ஜெயன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள்” என்றார்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon