மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

தேர்தல் வெற்றியை நோக்கிச் செல்லவில்லை!

தேர்தல் வெற்றியை நோக்கிச் செல்லவில்லை!

நாங்கள் தேர்தல் வெற்றியை நோக்கி செல்லவில்லை. மக்களுக்கு நீதி சொல்லும் வெற்றியை நோக்கி செல்கிறோம் என்று குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தைத் துவங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன், கட்சியை வளர்க்கும் பணிகளில் தீவிரப்படுத்தியுள்ளார். கட்சி நிர்வாகிகளின் மண்டல ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்று வந்த நிலையில், வீடியோ கான்பரன்சிங் முறையில் நிர்வாகிகளிடம் ஆலோசனையும் நடத்தினார்.

இந்நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கமல்ஹாசன் மூன்று நாட்கள் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். இன்று (மே 16) கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருக்கும் அஸ்தி பீடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி கமல்ஹாசன் தனது பயணத்தைத் துவக்கினார். குமரி மணக்குடி கிராம மக்களிடையே திறந்த வேனில் இருந்தபடி பேசிய கமல்ஹாசன், "உங்கள் மூலமாகவே உங்களின் நிறைகுறைகளை கேட்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பயணம். என் மக்களை நான் புரிந்து கொள்வதே பெரும் கல்வி. உங்கள் நம்பிக்கை என்னுடைய நம்பிக்கையாக மாறும். என் நம்பிக்கை உங்களுடைய நம்பிக்கையை மாறவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் " என்று பேசினார்.

தொடர்ந்து குளச்சலில் மீனவர்களுடனான கலந்துரையாடலில் பேசிய கமல்ஹாசன், "நீங்கள் சொல்வதைக் கேட்டு, நான் சொல்லும் பதில் உங்களுக்கு திருப்தியடையும் வரை உங்களுக்கு சொல்வேன். நாங்கள் வெற்றியை நோக்கி செல்வது தேர்தல் வெற்றியை நோக்கி அல்ல. மக்களுக்கு நீதி சொல்லும் வெற்றியை நோக்கி. தற்போது பணத்தை வைத்து எதையும் சாதித்துவிடலாம் என்று கர்வம் கொள்பவர்களின் தோல்வி நேரம் ஆரம்பித்து விட்டது என்றே எண்ணுகிறேன்" என்றார்.

பயணத்தின்போது குளச்சலிலிருந்து கருங்கல் செல்லும் வழியில் பைக் ஒன்று விபத்துக்குள்ளானது. இதனைப் பார்த்த கமல்ஹாசன், விபத்தில் காயமடைந்த பெண்ணைத் தனது காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் வழியில் ஆம்புலன்ஸ் வந்ததைத் தொடர்ந்து, அந்தப் பெண் ஆம்புலன்ஸுக்கு மாற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon