நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான மக்கள் சந்திப்புப் பயணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று தொடங்குகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், தொடர்ந்து மக்களைச் சந்தித்து வருகிறார். மேலும், கடந்த மே 1ஆம் தேதி திருவள்ளூர் அருகே அதிகத்தூர் என்ற இடத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு அந்தக் கிராமத்தை தத்தெடுத்தார்.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் இன்று (மே 16) முதல் வரும் 18ஆம் தேதி வரை தென்மாவட்டங்களில் மக்கள் சந்திப்புப் பயணம் நடத்தவுள்ளார். குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதநகர் ஆகிய மாவட்டங்களில் பயணம் செய்யவுள்ளார். இதற்காக நேற்று (மே 15) பிற்பகல் விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற கமல்ஹாசன், “மக்களையும் கட்சி உறுப்பினர்களையும் சந்திப்பதற்காகத்தான் இந்தப் பயணம். பயணத்தில் மக்கள், அவர்களின் குறைகளைச் சொன்னால் அதைக் கேட்பேன். யாராவது குறைகளைக் கேட்கத்தானே வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், “ஸ்டெர்லைட் ஆலைக்கான அனுமதியை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்திருப்பதே மக்கள் போராட்டத்தின் வெற்றிக்கான முதல்படியாக எடுத்துக்கொள்ள வேண்டும். போராடும் மக்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவு என்றுமே உண்டு. இனியும் மக்களின் கோரிக்கைகளை அரசு காதுகொடுத்து கேட்காவிட்டால் போராட்டம் தொடர்ந்து தீவிரம் அடையும்” என்றும் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் இன்று காலை கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கவுள்ளார்.
தூத்துக்குடி செல்வதற்கு முன்பாக நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி மக்களின் முடிவாகத் தான் பார்க்க முடியும். வேறு எப்படி அதைப் பார்க்க முடியும்.
கர்நாடகாவில் பணம் ஆதிக்கம் இருந்ததா என்பதை பார்க்க வேண்டும் பண ஆதிக்கம் இந்திய அரசியலில் இருந்து கொண்டு இருக்கிறது இப்போது தனியாக குறிப்பிட்டு சொல்ல முடியாது” என்று கூறினார்.
மேலும், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். அவர்கள் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்று நினைக்கிறேன்” என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.