மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

விரைவில் பேட்டரி பேருந்துகள்!

விரைவில் பேட்டரி பேருந்துகள்!

சென்னையில் விரைவில் பேட்டரி பேருந்துகள் இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை மேற்கு மற்றும் தென்மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இன்று (மே 16) அமைச்சர் ஆய்வு செய்தார்.

மேற்கு மற்றும் தென் மேற்கு சென்னையில் 49 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 129 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதற்கான குழுவில் போக்குவரத்து அலுவலர்கள், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், வருவாய் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து, சான்றிதழ்களை வழங்கினர். நகரில் உள்ள 630 வாகனங்கள் குறித்த இறுதி அறிக்கை, 10 நாட்களில் போக்குவரத்துத் துறையிடம் சமர்பிக்கப்படும். ஆய்வின் போது வாகனத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரிசெய்ய பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ”சாலை விபத்துக்களை 2020க்குள் பாதியாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில், பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், கூடுதல் பேருந்து வசதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால், தமிழகம் முழுவதும் ஐந்தாயிரம் புதிய பேருந்துகள் இயக்கப்படும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மிக விரைவில் பேட்டரி பேருந்துகள் இயக்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டுக்குள் 200 பேட்டரி பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி பேருந்துகள் மும்பையில் இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்துகள் மூலம் காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் குறைக்க முடியும்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon