மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

உரிமை கோரினார் எடியூரப்பா

உரிமை கோரினார் எடியூரப்பா

கர்நாடகாவில் ஆட்சியமைப்பதற்காக ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் இன்று மீண்டும் உரிமை கோரினார் எடியூரப்பா, 104 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட ஆதரவுக் கடிதத்தையும் அவர் ஆளுநரிடம் அளித்துள்ளார்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக 104 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. இதையடுத்து குமாரசாமி முதல்வராவதற்கு ஆதரவு தருவதாக காங்கிரஸ் அறிவித்தது. ஆனால் நேற்று மாலையே ஆளுநரைச் சந்தித்த பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தாங்கள்தான் தனிப்பெரும் கட்சி என்று கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் எங்களுக்கு அனுமதியளித்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் இன்று காலை மல்லேசுவரத்திலுள்ள கர்நாடக பாஜக அலுவலகத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக எடியூரப்பா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

கர்நாடக ராஜ்பவனில் காலை 11.30 மணியளவில் ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்த எடியூரப்பா, பாஜக எம்.எல்.ஏ.க்கள் 104 பேர் கையெழுத்திட்ட கடிதத்தை ஆளுநரிடம் அளித்து ஆட்சியமைக்க மீண்டும் உரிமை கோரினார். சந்திப்பில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், அனந்தகுமார் ஆகியோரும் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, "பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக என்னை எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தேர்வு செய்துள்ளனர்.கர்நாடகாவில் ஆட்சி அமைக்க விரைவில் பாஜகவுக்கு அழைப்பு விடுக்குமாறு ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

கர்நாடக பிரஞ்யாவந்த ஜனதா கட்சி (கேபிஜேபி) என்ற கட்சி சார்பில் ராணிபென்னூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்ற சங்கர், பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனால் பாஜக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பலம் 105ஆக உயர்ந்துள்ளது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon