இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.1 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 94.1 சதவிகித மாணவிகளும் 87.7 சதவிகித மாணவர்களும் அடங்குவர் எனப் பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி முடிவடைந்த பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகின. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 92.1 சதவிகிதம். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 1 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு, 76,353 மாணவர் மற்றும் மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர்.
முதல் மூன்று மாவட்டங்கள்
பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 97 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து, 96.3 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்று ஈரோடு இரண்டாம் இடத்தில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 96.18 தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த வரிசையில், 83.35 சதவிகித தேர்ச்சி பெற்று விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.
பாட வாரியாக
பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பாடவாரியாக மாணவர் தேர்ச்சி சதவிகிதங்கள் பின்வருமாறு:
இயற்பியல் 96.4 %
வேதியியல் 95 %
உயிரியல் 96.3 %
கணிதம் 96.1 %
தாவரவியல் 93.9 %
விலங்கியல் 91.9 %
கணினி அறிவியல் 96.1 %
வணிகவியல் 90.3 %
கணக்குப் பதிவியல் 91 %
மதிப்பெண்கள்
71,368 மாணவ,மாணவிகள் 1001 முதல் 1100 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர்.
1,07,266 மாணவ,மாணவிகள் 901-1000 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர்.
1,65,425 மாணவ,மாணவிகள் 701 முதல் 800 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர்.
1180 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் - 231.
1151 முதல் 1180 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் - 4847
1126 முதல் 1150 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் - 8510.
1101 முதல் 1125 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் - 11739
1001 முதல் 1100 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் - 71,368
901 முதல் 1000 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் - 1,07,266
801 முதல் 900 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் - 1,43,110
701 முதல் 800 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் - 1,65,425
700-க்கும் குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்கள் - 3,47,938
கடந்த ஆண்டும், இந்த ஆண்டும்
கடந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தொடங்கி 30 ஆம் தேதி முடிவடைந்த பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை 8,93,262 மாணவர்கள் எழுதினர். அதில், 4,15,331 மாணவர்களும், 4,77,930 மாணவிகளும் ஆவர். அதில், 92.1 சதவிகித மாணவர்கள தேர்ச்சி பெற்றனர். 89.3 சதவிகித மாணவர்களும், 94.5 சதவிகித மாணவிகளும் தேர்ச்சி அடைந்தனர்.
இந்தாண்டு 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். 4,60,255 மாணவிகளும், 4,00,179 மாணவர்களும் தேர்வு எழுதினர். 91.1 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். 94.1 சதவிகித மாணவிகளும் 87.7 சதவிகித மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 6,754 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. அதில், 1907 பள்ளிகள் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய 2,574 பள்ளிகளில் 238 பள்ளிகள் 100 சதவிகிதப் பள்ளிகள் தேர்ச்சி பெற்றுள்ளன.
தேர்வில் பங்கேற்ற 4,180 தனியார் பள்ளிகளில்,1669 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
கல்வியாளர்கள் கருத்து
சோமசுந்தரம்
கல்வி என்பது மதிப்பெண் பெறுவதற்கு மட்டுமல்ல, மதிப்பான வாழ்க்கையை வாழ்வதற்கும்தான்.
இன்னும் ஒரு மாதத்துக்குள் கடின முயற்சி செய்து தேர்ச்சி பெற்றுவிடலாம். அதனால், மாணவர்கள் தோல்வி அடைந்துவிட்டோம் எனப் பதற வேண்டாம். பெற்றோர்கள் காரணத்தை அறிந்து அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்.
ராஜராஜன்
தன்னுடைய மொழியை முன்னிலைப்படுத்தும், ஆராய்ச்சி செய்யும் நாடுகள் முதலிடத்தில் உள்ளன. மொழி ஆர்வத்தை மாணவர்களிடையே உருவாக்கும்போது, அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறக்கூடிய நிலையை மாணவர்கள் அடைந்துவிடுவார்கள்.
அமைச்சர் அறிவுரை
பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள், ஜூன் 25 ஆம் தேதி மீண்டும் தேர்வெழுதலாம். தோல்வியைக் கண்டு மாணவர்கள் அஞ்சக் கூடாது. அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. தோல்வி பெற்றவர்களும் ஜூலை மாதத்தில் கல்லூரி செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தனியார் பள்ளிகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரங்களாக வெளியிடக் கூடாது. மீறும் தனியார் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எனவும் கூறியுள்ளார்.
ரேங்கிங் சிஸ்டம் மூலம் பல மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். அதனைத் தவிர்க்கவே தற்போது தேர்ச்சி விகிதத்தை மட்டும் வெளியிட்டுள்ளோம்.
தமிழக அரசின் இந்த முயற்சிக்கு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிறுவனங்கள் உட்படப் பல தரப்பினரின் வரவேற்பு கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.