மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

கிச்சன் கீர்த்தனா: முருங்கைக்கீரை - கேழ்வரகு அடை!

கிச்சன் கீர்த்தனா: முருங்கைக்கீரை - கேழ்வரகு அடை!

இரும்புச் சத்தும் குளிர்ச்சியும் நிறைந்த உடலுக்குச் சத்தான முருங்கைக்கீரை - கேழ்வரகு அடை செய்து அசத்தலாம் வாங்க..

தேவையான பொருள்கள்:

கேழ்வரகு மாவு - 250 கிராம், வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கவும்), பூண்டு – 10, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு, பச்சை மிளகாய் – 4, முருங்கைக்கீரை - 2 கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பின் சிறிதளவு நீர்விட்டுப் பிசையவும். பிசைந்த மாவு சிறிது நெகிழ்ச்சியாக, குழைவாக இருக்க வேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் கலந்து வைத்துள்ள மாவை, அடை போல தட்டி அதை தோசைக்கல்லில் போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேக வைத்து பொன்முறுவலாக எடுத்துப் பரிமாறவும். சத்தான முருங்கைக்கீரை - கேழ்வரகு அடை தயார்.

குறிப்பு:

இந்த அடையைக் காய்கறி அல்லது ஏதாவது ஒரு கீரை எனக் கலந்தும் செய்யலாம். தனியாகச் சாப்பிட்டாலும் அருமையான சுவை கிடைக்கும். சர்க்கரையுடன் சேர்த்தும் சாப்பிடலாம். கம்பு மாவு, சோள மாவு, கோதுமை மாவு, சத்து மாவு போன்றவற்றிலும் இந்த அடையைத் தயாரிக்கலாம்.

பயன்கள்:

மாலை நேரத்துல அதிகம் எண்ணெய் சேர்க்காத பாரம்பரிய உணவு சாப்பிட்ட மாதிரியும் ஆச்சு. முருங்கைக்கீரையில் இருக்கும் வைட்டமின் ஏ, பி, சி சத்துகளும், சுண்ணாம்புச் சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம், தாது உப்புகளும் உடம்பில் சேர்ந்த மாதிரியும் ஆச்சு!

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon