மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

தேர்வுத் தோல்வியை கொண்டாடிய தந்தை!

தேர்வுத் தோல்வியை கொண்டாடிய தந்தை!

மத்தியப் பிரதேசத்தில் பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவரின் தந்தை தனது மகனின் தோல்வியைக் கொண்டாடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் டிலி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்திர குமார் வியாஸ். கட்டிட காண்டிராக்டர். இவரது மகன் அன்சு. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியிருந்தார்.

நேற்று முன்தினம் மத்தியப் பிரதேசத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியானது. இதில் அன்சு தோல்வியடைந்தார். தான் தோல்வி அடைந்ததை எண்ணி மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்.

இதை உணர்ந்த அவரது தந்தை மகனை ஊக்கப்படுத்தும் விதமாக அன்சுவின் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் அழைத்து விருந்து அளித்துள்ளார். பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடியுள்ளார். இவரின் செயல் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சுரேந்திர குமார் வியாஸ், “பொதுத்தேர்வுக்காக அன்சு கடுமையாக உழைத்தான். எனினும், தோல்வி அடைந்திருக்கிறான். தேர்வில் தோல்வி அடைந்தாலே மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். அன்சுவும் மன அழுத்தத்தில் இருந்தான். அவனை உற்சாகப்படுத்தவே இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்தேன்.

தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் நான் ஒரு வி‌ஷயத்தைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

தேர்வு என்பது மாணவர்களின் கடைசி வாய்ப்பு அல்ல. வாழ்க்கையில் வெற்றிபெற நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு . அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அன்சுவும் அடுத்த ஆண்டு மீண்டும் தேர்வு எழுதுவான்" என்று கூறியுள்ளார்.

இது குறித்து அன்சு, "அப்பாவின் இந்தச் செயல் என்னை ஊக்கப்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு தேர்வு எழுதி நிச்சயம் வெற்றி பெறுவேன்” என்று கூறியுள்ளார்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon