மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

கோதாவரி படகு விபத்து : 30 பேர் பலி?

கோதாவரி படகு விபத்து : 30 பேர் பலி?

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கொண்டமொதலுவில் இருந்து பாப்பிகொண்டலுவிற்கு 55 சுற்றுலாப் பயணிகளுடன் எந்திரப் படகு ஒன்று நேற்று (மே 15) மாலை ஆறு மணிக்குப் புறப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் பயணித்த நிலையில், மண்டூர் அருகே சென்றபோது பலமான சூறைக் காற்று வீசியதில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படகில் சென்ற 55 பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதைக் கண்ட மண்டூர் கிராம மக்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் 11 பேர் மட்டுமே பத்திரமாக மீட்கப்பட்டனர். மற்றவர்களின் நிலைமை என்னவென்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில் தகவலறிந்து வந்த 35 பேர் கொண்ட பேரிடர் மேலாண்மைப் படையினரும், காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதலில் 17 பேரின் உடல் மீட்கப்பட்டதாகக் கூறிவந்த நிலையில் தற்போது 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 14 பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காவல் துறையினரின் விசாரணையில் கூடுதலாக 7 பயணிகளை ஏற்றிச் சென்றதால் விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தேவிப்பட்டினம் போலீசார் படகு உரிமையாளர் காஜா என்பவரைக் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளைத் துரிதப்படுத்த வலியுறுத்தியுள்ளார். விபத்து குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் படகு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்குப் பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

கோதாவரி ஆற்றில் படகு விபத்து என்பது தொடர்கதையாகிவருகிறது. சமீபத்தில் 120 பயணிகளுடன் சென்ற படகில் தீ விபத்து ஏற்பட்டது. சுற்றுலாத் துறையின் உரிமம் பெறாமல் படகுகள் இயக்கப்படுவதாலேயே விபத்துகள் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon