மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

மனித உணர்வுகளை ஆழமாக எழுதிய கலைஞன்!

மனித உணர்வுகளை ஆழமாக எழுதிய கலைஞன்!

‘மனித உணர்வுகளை மிகவும் ஆழமாகக் கூறிய எழுத்தாளர்’ என நடிகர் நாசரும்; ‘சமூகம் எப்படி பெண்களுக்கு இரண்டாம் தர இடத்தைத் தந்துள்ளது என்பதை தெளிவாக எழுதக்கூடியவர்’ என நடிகர் சிவகுமாரும் பாலகுமாரன் மறைவு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரபல எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான பாலகுமாரன் கடுமையான நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று (மே 15) காலமானார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்கு அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இலக்கியத் துறையினர், திரைத் துறையினர் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் திரளாக வந்து அஞ்சலி செலுத்திவருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், ராஜ்கிரண், இயக்குநர் அட்லி, மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோர் நேற்று அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து இன்று நடிகர்கள் பார்த்திபன், நாசர், சிவகுமார், விவேக், மனோபாலா, இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

தனக்கும் அவருக்குமான நட்புறவு குறித்துப் பேசிய நடிகர் பார்த்திபன், “கதையைவிட திரைக்கதைதான் சுவாரஸ்யம். என்னைப் பொறுத்தளவில் நாம என்ன எழுதுறோமோ என்பதைவிட நடைதான் ரொம்ப முக்கியம். இந்த நடை பற்றிச் சொல்லும்போது சுஜாதாவும் பாலகுமாரனும்தான் என் ஆரம்ப கால வாசிப்புக்கு முக்கிய காரணம். இவ்வளவு மூச்சுத் திணறலுக்கு மத்தியில் இவ்வளவு எழுதி இருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கும் அவருக்கும் மிக நெருங்கி நட்பு உண்டு. நான் பாக்யராஜ் சாரிடம் வேலை பார்க்கும்போது இது நம்ம ஆளு படத்தை இயக்க அங்கு வந்திருந்தார். அவரோடு தனியா பேசுவதற்கான வாய்ப்பு இருந்தது. அப்போ எங்க அப்பாவைப் பத்தி எனக்கும் அவருக்குமான நெருக்கத்தைச் சொன்னேன். ஒரு பதினைஞ்சு நாளில் ஒரு புத்தகம் வருது ’உன்னை கொடு என்னை தருவேன்’ என்கிற தலைப்பில். அதுல எனக்கும் அப்பாவுக்குமான நெருக்கத்தை நாவலாக வடிவமைச்சிருந்தார். அந்த மாதிரி ஒரு வேகம். அவர் எழுதியது நிறைய இருக்கு. அவர் எழுத வேண்டியது நிறைய இருக்கு. எழுத்து மட்டும் மறைஞ்சு போயிருச்சு என்பது வருத்தமான விஷயம். அவருடைய குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கல்” என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாசர், “பாலகுமாரன் அய்யா அவர்களை என்னுடைய முதல் பட செட்டில் வைத்துதான் முதன் முதலாக சந்தித்தேன். அப்போதுதான் இலக்கியம் எனக்கு பரிச்சயமான சமயம். நிறைய புத்தங்கங்களைப் படித்துக்கொண்டிருந்தபோது பாலகுமாரன் அவர்களின் புத்தகங்களையும் படித்தேன். மனித உணர்வுகளை மிகவும் ஆழமாகக் கூறிய எழுத்தாளர் அவர். அவர் நடிகர்களுக்காகச் சொன்ன விஷயம், நடிகர்கள் எவ்வளவு புத்தகங்கள் படிக்கிறார்களோ, எவ்வளவு மனித உறவுகள் பற்றித் தெரிந்துகொள்கிறார்களோ அவ்வளவு தூரம் நல்ல நடிகராக முடியும். அவர் அன்று சொன்னதை நான் இன்றும் கடைபிடிக்கிறேன். நாயகன் படத்தில் அவர் எழுதிய வசனத்தை நானும் பேசி நடித்துள்ளேன். அவருடைய புத்தகங்கள் மற்றும் நாயகன் போன்ற படங்களின் கடைசி பிரதி இருக்கும் வரையில் அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார். அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது” என்றார்.

பாலகுமாரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பத்திரியாளர்களிடம் பேசிய சிவகுமார், “பாலகுமாரனின் எழுத்துக்களுக்கு முழுவதும் அடிப்படையே அவருடைய அம்மா என்றுதான் சொல்ல வேண்டும். நடுத்தர வர்க்கத்து பெண்களின் வலிகள், வேதனைகள், சமூகம் எப்படி பெண்களுக்கு இரண்டாம் தர இடத்தைத் தந்துள்ளது என்பதைத் தெளிவாக எழுதக்கூடியவர் பாலகுமாரன். சினிமா மீது அவருக்கு முதலிலிருந்தே ஒரு காதல் இருந்தது. பாலகுமாரன் எழுத்துக்களுக்கு விகடன் மற்றும் கல்கி போன்ற பத்திரிகைகள் மிகப் பெரிய உதவியாக இருந்தன. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற ஒரு தொடரையும் பிரபல பத்திரிகைக்கு அவர் எழுதியுள்ளார்.

கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் இவர். அவருடைய நாயகன் மற்றும் குணா படங்களுக்கு இவர்தான் திரைக்கதை வசனம். காதலன், ஜென்டில்மேன், ஜீன்ஸ் போன்ற பெரிய அளவில் ஓடிய படங்களுக்கு இவர் தன்னுடைய எழுத்துக்களை அர்ப்பணித்துள்ளார். பாலகுமாரனுக்கு 45 வயதில்தான் ஆன்மிக ஆர்வம் வந்தது. அப்போது திருவண்ணாமலைக்குச் செல்ல ஆரம்பித்த அவர் அதன் பின்னர் ஆன்மிகத்திலேயே பயணிக்க ஆரம்பித்துவிட்டார். அதன் பின்னர் பட்டினத்தார் பாடல்கள் எல்லாவற்றையும் தொகுத்து ஆன்மிக நூல் ஒன்றை எழுதியுள்ளார். என்னைப் பொறுத்தவரை பாலகுமாரன் முழுவதுமாக வாழ்ந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு மனைவி உண்டு. காதல் மனைவி உண்டு. சூர்யா மற்றும் கௌரி என்று இரு குழந்தையும் உண்டு. அவரை முழுமையாக வாழ்ந்த மனிதராகத்தான் நான் பார்க்கிறேன். சித்தர்களின் வார்த்தைகள்படி ஆன்மா மட்டுமே நிரந்தரம். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்றார்.

இறுதிச் சடங்குகள் முடிவடைந்ததும் அவரது உடல் இன்று சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon