மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 24 நவ 2020

ஐபிஎல்: கேப்டன் தந்த வெற்றி!

ஐபிஎல்: கேப்டன் தந்த வெற்றி!

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இரு அணிகளின் மாற்றங்கள்

ராஜஸ்தான் அணியில் இஸ் சோதி, அனுரீத் சிங், ராகுல் திரிபாதி ஆகியோர் மீண்டும் இடம்பிடித்திருந்தனர். கொல்கத்தா அணியில் பியூஷ் சாவ்லாவுக்கு பதில் சிவம் மாவி இடம் பிடித்திருந்தார்.

டாஸ் வென்ற கொல்கத்தா, ராஜஸ்தானை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. ராகுல் திரிபாதி, ஜாஸ் பட்லர் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். முதல் ஓவரைச் சிறப்பாக வீசிய மாவி, வெறும் 2 ரன்களை மட்டுமே வழங்கினார். இரண்டாவது ஓவர் முதல் அதிரடி ஆரம்பமானது.

பிரசித் வீசிய அந்த ஓவரில் ஒரு சிக்சர் மூன்று பவுண்டரி உட்பட 19 ரன்கள் குவித்தார் திரிபாதி. மூன்றாவது ஓவரில் பட்லர் 2 சிக்சர், 4 பவுண்டரி உட்பட 28 ரன்கள் சேர்த்தார். சிவம் மாவி வீசிய அந்த ஓவர், இந்த சீசனில் அவரது இரண்டாவது மோசமான ஓவராகும் (முன்னதாக டெல்லி அணிக்கெதிரான போட்டியில் கடைசி ஓவரில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார்).

பட்லர், திரிபாதியின் அதிரடியால் ராஜஸ்தான் அணி 3.2 ஓவர்களில் 50 ரன்களைக் கடந்தது. 15 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்து ராகுல் திரிபாதி ஆட்டமிழந்தார். இந்த அதிரடித் தொடக்கத்தைப் பயன்படுத்தி, பெரிய ஸ்கோர் எடுக்கத் தவறியது ராஜஸ்தான் அணி. 63 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த அந்த அணி அடுத்த 107 ரன்கள் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. கடைசிக் கட்டத்தில் ஜெய்தேவ் உனாட்கட் (26) கைகொடுக்க, இறுதியில் அந்த அணி 142 ரன்கள் சேர்த்தது.

கொல்கத்தா அணி 18 ஓவர்களில் வெற்றி இலக்கைக் கடந்து அபார வெற்றி பெற்றது. கேப்டன் தினேஷ் கார்த்திக் 41 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கொல்கத்தா அணியில் 4 ஓவர்களில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தினேஷ் கார்த்திக்கின் வெற்றிப் பயணம்

இந்த ஆண்டில் தினேஷ் கார்த்திக்கின் அணி வெற்றிகரமாக சேஸ் செய்த போட்டிகளில் அவரது ஸ்கோர் விபரம்:

கொல்கத்தா அணிக்காக:

35* (29)

42* (23)

23 (10)

45* (18)

41* (31)

இந்திய அணிக்காக:

2* (2)

39* (25)

29* (8)

தமிழ்நாடு அணிக்காக:

57 (32)

இந்த ஒன்பது போட்டிகளில் 7 முறை அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சாஹாவின் சாதனை சமன்

நேற்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் 3 கேட்ச் மற்றும் ஒரு ஸ்டெம்பிங் செய்து எதிரணி வீரர்கள் நான்கு பேர் ஆட்டமிழக்கக் காரணமாக இருந்தார். தினேஷ் கார்த்திக், ஐபிஎல் போட்டிகளில் விக்கெட் கீப்பராக நான்கு மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்கள் விழக் காரணமாக இருந்தது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக விரித்திமான் சாஹா இந்தச் சாதனையைப் படைத்திருந்தார்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon