நகர்ப்புற பகுதிகளில் ஒவ்வொரு மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கும் ஒரு மின்னணு வாகனங்களுக்கான சார்ஜிங் மையத்தை அமைக்க ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ளது.
எரிபொருள் செலவைக் குறைக்கும் விதமாகவும், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் விதமாகவும் மின்னணு வாகனப் பயன்பாட்டின் அவசியத்தை அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. இதன் காரணமாக மின்னணு வாகன உற்பத்தி சமீப காலமாக அதிகரித்து வருகிறது. மின்னணு வாகனப் பயன்பாடு அதிகரிக்கும்போது அதற்கான சார்ஜிங் மையங்கள் அமைக்க வேண்டிய தேவையும் உள்ளது. இதனால் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள், ஸ்மார்ட் நகரங்களில் ஒவ்வொரு மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கும் ஒரு சார்ஜிங் மையத்தை அமைக்க ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ளது.
அதேபோல, மற்ற பகுதிகளில் ஒவ்வொரு ஐம்பது கிலோ மீட்டர் தொலைவுக்கும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பரபரப்பான தேசிய நெடுஞ்சாலைகளிலும் மின்னணு வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை அமைக்கவும் ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ளது. சார்ஜிங் மையங்களை அமைக்க முன்வரும் நிறுவனங்களுக்கு நிதிச் சலுகைகள், உள்கட்டமைப்பு வசதிகள், நிலம் கையகப்படுத்துதலை எளிதாக்குதல் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் தி எக்கனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் பேசுகையில், "அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் மெதுவாக சார்ஜிங் செய்யும் 30,000 மையங்கள், வேகமாக சார்ஜிங் செய்யும் 15,000 மையங்கள் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகரங்களில் ஒவ்வொரு மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கும் வேகமாக சார்ஜ் செய்யும் மையம் ஒன்றும், இரண்டு மெதுவாக சார்ஜ் செய்யும் மையமும் அமைக்கப்படும். நெடுஞ்சாலைகளில் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவுக்கு சார்ஜிங் மையம் ஒன்று அமைக்கப்படும்" என்றார்.