மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

குஷ்பு மீது ஒழுங்கு நடவடிக்கை?

குஷ்பு மீது ஒழுங்கு நடவடிக்கை?

தமிழக காங்கிரஸ் தலைமை மாற்றப்பட இருப்பதாக குஷ்பு கூறியுள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இதற்கு பதிலளித்துள்ளார்.

கர்நாடக தேர்தலையோட்டி கடந்த வாரம் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உட்படப் பல காங்கிரஸார் அங்குப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே பீட்டர் அல்போன்ஸ், ப.சிதம்பரம், தங்கபாலு, செல்லக்குமார் ஆகிய தமிழக தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டிருந்தனர். பீட்டர் அல்போன்ஸ் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் அவரை தலைவராக கொண்டுவரச் சிதம்பரம் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே இது தொடர்பாக கடந்த 13ஆம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்துக்குப் பேட்டியளித்த நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு, “காங்கிரஸ் தலைவராக டிசம்பர் மாதம்தான் ராகுல்காந்தி பொறுப்பேற்றார். தற்போது அவர் கர்நாடக தேர்தலில் மும்முரமாக உள்ளார். அதன்பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சி தொடர்பாக அவர் ஆலோசிப்பார். தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் ஏற்படும். பல்வேறு மூத்த தலைவர்கள் இந்தப் பதவிக்கான போட்டியில் உள்ளனர்” என்று தெரிவித்தார்.

மேலும், அந்த மூத்த தலைவர்களின் பெயர்களை தற்போது தெரியவிக்க முடியாது என்று குறிப்பிட்ட குஷ்பு. “தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் இளங்கோவன் மாற்றப்படவில்லை. அவராகவே தனது பதவியை ராஜிநாமா, செய்தார். தனது உடல்நிலையைப் பார்த்துக்கொள்ளவும், அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுமே அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார். தற்போது காங்கிரஸின் தமிழக தலைமையில் மாற்றம் தேவைப்படுகிறது. அது தொடர்பாக பேசி வருகிறோம். ப.சிதம்பரம் புகழ்பெற்ற தலைவர் என்பதால் அவரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மாநில தலைவர் பதவியை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பது சந்தேகம்தான்” என்றும் குறிப்பிட்டார்.

இதேபோல், கட்சியை ஒருங்கிணைத்து செல்லக்கூடிய ஒருவர் தலைவராக தேவை என்று குறிப்பிட்டுள்ள குஷ்பு, “ நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஆனால், பிற மாநில காங்கிரஸ் அளவுக்குத் தமிழ் மாநில காங்கிரஸ் குரல் எழுப்பவில்லை. எந்தவொரு நடவடிக்கையும் இல்லாமல் செயலற்று கிடக்கிறது. எனவே, அடுத்த இரண்டு மாதங்களில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார்” என்று குஷ்பு தெரிவித்தார்.

குஷ்புவின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. நேற்று (மே 15) காஞ்சிபுரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் மறைமலைநகரில் நடந்தது.

இதில் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் குஷ்பு மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினர். அம்மேடையில் பேசிய காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் பவன்குமார், “தலைவரைப் பற்றி அவதூறாகப் பேசிய குஷ்பு மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழக காங்கிரஸ் தலைவர் பற்றி பேச குஷ்புவுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? அவர் இந்தியா முழுதும் உள்ள 60-க்கும் மேற்பட்ட செய்தித் தொடர்பாளர்களில் ஒருவர். தலைமையின் குரலை ஒலிக்க மட்டுமே அவருக்கு அதிகாரம் உள்ளது.

இவ்வளவு பேசும் குஷ்பு கட்சிக்கு என்ன செய்திருக்கிறார்? எத்தனை உறுப்பினர்களை சேர்த்திருக்கிறார்? ஒரு மேடை ஏற வேண்டுமென்றால் அதற்குப் பணம், பிளைட் டிக்கெட் என்று காங்கிரஸ் கட்சியை பயன்படுத்தி அவர்தான் வளர்ந்தார். குஷ்பு மீது தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பேசினார். பலரும் இதேபோல பேசினார்கள்.

அக்கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர், “இவர் எங்கிருந்து எப்படி வந்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். அரசியலில் உன் பாட்டியான ஜெயலலிதாவையே பார்த்தவன் நான். கட்சி எனக்கு தலைவர் பதவியைக் கொடுத்திருக்கிறது. நான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இந்த அம்மா பத்தி பேசவே வேண்டியதில்ல’’ என்று கோபமாக பதில் கொடுத்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், ‘’தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவதாக சிலர் கூறுவது அவர்களது பைத்தியக்காரத்தனத்தைக் காட்டுகிறது. லூசு தனமாக பேசுபவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது’’ என்று விமர்சித்துள்ளார்.

குஷ்பு மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது பற்றி திருநாவுக்கரசர் ஆலோசித்து வருவதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon