மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

மீண்டும் ஜெவுடன் ஒப்பிட்ட அமைச்சர்!

மீண்டும் ஜெவுடன் ஒப்பிட்ட அமைச்சர்!

ஜெயலலிதாவுடன் யாரையும் ஒப்பிட முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்த நிலையில், “ஜெயலலிதாவைப் போல் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்கிறார்” என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். தென்னிந்திய நதிகள் இணைப்பு பற்றி நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்திற்கு ரஜினி காரைக்குடி ஆச்சியை வேண்டுமானால் பிடிக்கலாம் தமிழக ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று விமர்சனம் செய்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பவே அதற்கு வருத்தம் தெரிவித்தார், வருத்தம் தெரிவித்த போதும் நான் மனோரமா ஆச்சியை பற்றி தான் சொன்னேன் என்று மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அவரது பேச்சுகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கிண்டல் செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக நேற்று (மே 15) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு, “ஜெயலலிதா இருந்தால் எந்த மாதிரி ஆட்சி நடைபெறுமோ அதைப்போல தமிழக முதல்வர் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். மக்களை எளிமையாக சந்திக்கும் முதல்வர் பழனிசாமி தமிழ்நாட்டுக்கு கிடைத்த வரப்பிரசாதம். காவிரி விவகாரத்தில் அதிமுக அரசு கொடுத்த அழுத்தத்தின் விளைவாகத் தான் இந்தளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதாவை விட முதல்வர் பழனிசாமி சிறப்பாக செயல்டுகிறார் என்று சேலம் கோடை விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். அது சர்ச்சையை ஏற்படுத்தவே அதனை மறுத்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதாவுடன் யாரையும் ஒப்பிட முடியாது. அமைச்சரின் கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

தற்போது அமைச்சர் செல்லூர் ராஜு வெளிப்படையாகவே ஜெயலலிதாவை முதல்வர் பழனிசாமியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon